ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.
ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.
இந்த நிலையில் சென்னை விமானநிலையம் வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''மூன்றாவது முறையாக ஒரு வரலாற்று சாதனையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க இருக்கிறார். தொடர்ச்சியாக ஆட்சி செய்வது என்பது மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் சவாலான விஷயம். அந்தச் சாதனையைப் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. நாளை பாராளுமன்ற மைய மண்டபத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினுடைய நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற எம்பிக்கள், ராஜ்யசபா எம்பிக்கள், பாஜக தேசிய நிர்வாகிகளுக்கான கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது. அதில் நாடு முழுவதும் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர்கள் 'கோவையின் தேர்தல் முடிவு குறித்து சொல்லுங்கள்' எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு, ''கோவை முடிவு என்பது எங்களுக்கு வருத்தத்தை தந்திருக்கக் கூடிய முடிவுதான். ஆனாலும் கூட மக்களுடைய தீர்ப்பை மதித்து அந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக மக்கள் பணி செய்வதற்கு பாஜக எங்களுக்கு பயிற்றுவித்திருக்கிறது. எப்பொழுதும் மக்களுக்கான பணிகளைத் தொடர்ந்து செய்து கெண்டே இருப்போம். மத்தியில் பாஜக தலைமையிலான அரசு மீண்டும் அமைகின்ற பொழுது கோவை பகுதிக்கு என்னவெல்லாம் திட்டங்கள் சொல்லி இருக்கிறோமோ அதை எல்லாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம். ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் கூட பல்வேறு பொய்களை முன் வைத்தார். பாஜக வந்தால் அரசியல் சட்டத்தை மாற்றிவிடுவார்கள்; இட ஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் எனப் பலவிதமான பொய் பிரச்சாரங்களை காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொண்டனர். ஆனால் இவற்றையெல்லாம் மீறி தான் மீண்டும் மூன்றாவது முறையாக நாங்கள் ஆட்சி அமைக்கிறோம்'' என்றார்.