கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து போலீசார் தமிழகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான். இவரது மகன் இஸ்மாயில் கோவையில் இந்து அமைப்பு தலைவர்களைக் கொலை செய்ய திட்டம் தீட்டிய வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக கடந்த 2012 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
அப்போது இஸ்மாயில் வீட்டில் தேசியப் புலனாய்வு போலீசார் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி கோவை சிறையில் அடைத்தனர். பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி திண்டிவனம் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு இஸ்மாயில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து திண்டிவனம் இஸ்மாயில் வீட்டில் நேற்று முன்தினம் ஏஎஸ்பி அபிஷேக் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, “கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமாக தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட பழைய குற்றவாளியான இஸ்மாயில் வீட்டில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தோம். அவரது குடும்பத்தினர் அனைவரும் சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். சோதனையின் போது சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் அந்த வீட்டில் இல்லை.” எனத் தெரிவித்தனர்.