
கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பார்சல் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதையடுத்து அவர்கள் அந்தப் பார்சலை ஸ்கேன் செய்து பார்த்தனர்.
அந்தப் பார்சலில் துப்பாக்கி போன்ற பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பார்சலைத் தகுந்த பாதுகாப்புடன் பிரித்துப் பார்த்தபோது அதில், ஒரு கைத் துப்பாக்கி, குண்டுகளுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் அந்தக் கைத் துப்பாக்கியை பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததுடன், அதுகுறித்து புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்தப் பார்சல் சேலம் மாவட்டம், சேர்மன் சின்னையா ரோடு பகுதியில் வசிக்கும் டாக்டர் சாமுவேல் ஸ்டீபன் என்பவர் பெயரில் அனுப்பப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
அதேபோல், பெறுநர் முகவரியில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து டாக்டர் சாமுவேல் ஸ்டீபனை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.