இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கூட்டுறவுத்துறை சிறப்பாகச் செயல்படுகிறது என்றும் திராவிட மாடல் ஆட்சி நாயகன் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் மாதம் முழுவதும் ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்குத் தடையின்றி கிடைக்கிறது என்றும் புது வக்கம்பட்டியில் நியாயவிலைக்கடையைத் திறந்து வைத்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வக்கம்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள், அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர். தங்கள் பகுதியில் நியாயவிலைக்கடை திறக்க வேண்டுமென ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வக்கம்பட்டியில் புது நியாயவிலைக்கடை திறக்கப்பட்டது.
இன்று இந்தத் திறப்பு விழா நடைபெற்றது. இதில், பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, “இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்படுகிறது. கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திமுக ஆட்சியின் போது வருவாய்த்துறை அமைச்சராக இருந்த நான், கிராமங்கள் தோறும் நியாயவிலைக் கடையைத் திறக்க உத்தரவிட்டதால் 300 குடும்ப அட்டைகள் உள்ள கிராமங்களில் கூட பகுதி நேர நியாயவிலைக்கடைகள் திறக்கப்பட்டன. அதன் பின்பு அதிமுக ஆட்சியில் ஒரு நியாயவிலைக்கடை கூட ஆத்தூர் தொகுதியில் திறக்கவில்லை. தற்போது மீண்டும் திமுக ஆட்சியில் ஆத்தூர் தொகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நியாயவிலைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பழைய வக்கம்பட்டிக்குச் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர். தங்கள் பகுதிக்கு நியாயவிலைக்கடை வேண்டுமென கோரிக்கை விடுத்ததால் இப்பகுதியில் புதிய நியாயவிலைக்கடை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்களுக்கு சிரமமின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
செம்பட்டி - திண்டுக்கல் சாலையில் வக்கம்பட்டி அருகே விபத்து ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் அவசர சிகிச்சை மையம் அமைய உள்ளது. இதன்மூலம் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் சூழ்நிலை உருவாகும்” என்று கூறினார்.