ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.
இத்தகை சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (24.03.2024) காலை கணேசமூர்த்தி திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி கடந்த 28 ஆம் தேதி (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் இன்று (31.03.2024) மாலை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்கு முன்னதாக ஈரோட்டில் உள்ள ஆவல்பூந்துறை பகுதியில் உள்ள மறைந்த எம்.பி. கணேசமூர்த்தி இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினரிடம் தனது இரங்கலையும் அறுதலையும் தெரிவித்தார்.