காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் படித்த அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்து உணவு அருந்தினார்.
அதன் பின் பேசிய முதல்வர், “பலரது மகிழ்ச்சிக்குக் காரணமாக நான் இருப்பதால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த மாதம் மற்றொரு கூடுதல் மகிழ்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது. அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கப்படவுள்ளது. அதனால் எனக்கு அதிக மகிழ்ச்சி ஏற்படப்போகிறது. இப்படி மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும் இந்த திராவிட மாடல் திட்டங்களில் மிக முக்கியமான திட்டம்தான் காலை உணவுத் திட்டம். கடந்த ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் உள்ள ஒரு மாநகராட்சியில் மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைத்தேன். அதை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் இன்று திருக்குவளையில் செயல் வடிவமாக்கப்பட்டு இருக்கிறது. ‘உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்’ என்று மணிமேகலை காப்பியம் சொல்கிறது. அப்படி திமுக அரசு இன்றைக்கு உயிர் கொடுத்திருக்கிறது. இதற்கு நான் முதல்வராக மட்டுமில்லை, கலைஞரின் மகனாகவும் பெருமைப் படுகிறேன். இதை விட எனக்கு வேறு என்ன பெருமை வேண்டும்.
இந்தப் பள்ளி, பல பள்ளிகளையும் பல கல்லூரிகளையும் உருவாக்கிய கலைஞர் படித்த பள்ளி. நிச்சயமாக அவருக்குப் பள்ளியில் படிக்கும் போது முதல்வராக வேண்டும் என்ற ஆசை எல்லாம் இருந்திருக்காது; அவரின் தமிழ்ப் பற்றும், எழுத்தாற்றலும், சிந்தனையும் தான் அவரை அரசியலுக்கு அழைத்து வந்து முதல்வராக்கியுள்ளது. அந்த பெருமை திருக்குவளை பள்ளிக்கும், திருவாரூர் பள்ளிக்கும் தான் சேரும். திருக்குவளையில் பிறந்து ஆரம்பக்கல்வி கற்று, திருவாரூரில் வளர்ந்து சளைக்காமல், விடா முயற்சியாலும், போராட்டங்களாலும் வெற்றி சிகரத்தைத் தொட்டவர் கலைஞர். வரலாற்றில் நமக்குக் கிடைக்கக் கூடிய இடம் சலுகைகளால் கிடைக்காமல் போராட்டத்தால் தான் கிடைக்க வேண்டும் சொன்னார் கலைஞர். அப்படி கடற்கரையில் ஓய்வெடுத்து வரும் அந்த இடத்தை கூட போராடிப் பெற்றவர்தான் கலைஞர்.
சென்னை அசோக் நகரில் இருக்கக்கூடிய பெண்கள் பள்ளிக்கு ஒரு விழாவிற்காகச் சென்றிருந்தேன். அப்போது, மாணவிகளிடம் காலையில் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டேன். பெரும்பாலான மாணவிகள் காலையில் சாப்பிடவில்லை என்றனர். ஒரு சிலர் அம்மா பள்ளியில் போய் சாப்பாடு சாப்டுக்கோ என்று சொன்னதாகவும், சிலர் காலையில் எங்கள் வீட்டில் சமைக்கவில்லை என்றும் கூறினார்கள். அன்றுதான் மாணவர்களுக்குக் காலையில் உணவு வழங்குவது என்று முடிவெடுத்தேன். அதிகாரிகளிடம் கூறியபோது நிதிச்சுமை உள்ளிட்ட காரணங்களைச் சொன்னார்கள். ஆனால் இதை விட வேறு எதுவும் பெரிதாக இருக்க முடியாது என்று கட்டாயப்படுத்தி விரைவாகத் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று கூறி இன்றைக்குச் செயல்படுத்தி விட்டோம். காலை உணவு கிடைக்க வேண்டும்; ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கக் கூடாது; ரத்த சோகையைத் தவிர்க்க வேண்டும் எனப் பல்வேறு காரணங்களுக்காகத்தான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவில் புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் தமிழகம் என்றுமே முதன்மை இடத்தில் இருக்கிறது.
அந்த காலத்தில் அரசர் குலம் மட்டுமே கற்றுக்கொண்ட வில்வித்தையை வேடர் குலத்தைச் சேர்ந்த ஏகலைவன் கற்றுக்கொண்டதற்காக அவரது கட்ட விரலைக் காணிக்கையாகப் பெற்ற துரோணாச்சாரியார் போன்ற ஆசிரியர்தான் இருந்தார்கள். பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்த சமூகநீதி பாதையில் அனைத்து அறிவையும், அனைத்து சமூகத்தினருக்கும் கொடுக்கும் அறிவை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையிலும் தேசியக் கல்விக் கொள்கை, நீட் என்கிற பேரில் தடுப்புச் சுவர்கள் போடுகிற துரோக ஆச்சார்யர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏகலைவன் கட்ட விரல்களைக் கொடுத்தது எல்லாம் அந்தக் காலம். இது கலைஞர் உருவாக்கி தந்திருக்கக்கூடிய காலம். இது துரோணாச்சாரியார் காலம் அல்ல; ஏகலைவர்கள் காலம். அதனால் மாணவர்கள் அனைவரும் நன்றாகப் படியுங்கள் படிப்பு மட்டும்தான் தமது சொத்து.” என்றார்.