ஈரோடு மாவட்ட மக்களுக்கு விவசாயம் மற்றும் குடிநீருக்கு ஆதாரமாக இருக்கிறது பவானிசாகர் அணையில் இருந்து வருகிற பவானி ஆற்று நீர். தடப்பள்ளி அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காளிங்கராயன் என ஈரோடு மாவட்டத்தில் மூன்று பாசனப் பகுதிகள் ஏறக்குறைய மூன்று லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் நேரடி விளைச்சலுக்கும், 10 லட்சம் மக்களின் குடிநீர் தேவைகளுக்கும் இந்த பவானி ஆற்று நீரே உயிராயுதம்.
கீழ்பவானி பாசனப் பகுதிகளுக்கு பவானிசாகர் அணையிலிருந்து நேரடியாக நீர் செல்கிறது. தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசான பகுதிக்கு கொடிவேரி அணையில் இருந்து பிரிந்து செல்கிறது. தொடர்ந்து கொடிவேரி அணையில் இருந்து வெளியேறி வரும் பவானி நதி, பவானி கூடுதுறை அருகே அணைக்கட்டு என்ற இடம் வரை வந்து அங்கிருந்து காவேரி ஆற்றில் கலக்கிறது. இந்த உபரி நீர் காவேரியில் கலப்பதை விட அதை வறட்சியான பகுதிகளில் பயன்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கனவுதான் அத்திக்கடவு அவினாசி திட்டம்.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகள் இன்று வரை வறண்ட பூமியாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த இடங்களில் உள்ள குளம், குட்டை, ஏரிகளில் இந்த உபரி நீரைக் கொண்டு வந்து சேமித்தால் குடிநீர் மட்டுமல்லாமல் விவசாயமும் செய்ய முடியும். இதை அரசு செய்ய வேண்டும் என நீண்ட காலமாக இப்பகுதி விவசாயிகள் குரல் கொடுத்ததோடு இதற்காக அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு விதமான போராட்டங்களையும் செய்தார்கள்.
இதனைத் தொடர்ந்து கலைஞர் ஆட்சியில் இருந்தபோது இதுகுறித்து முதல் முதலாக ஆய்வுப் பணி செய்யப்பட்டது. தொடர்ந்து வந்த அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் ஜெயலலிதா இருந்தபோது ரூ.3 கோடி நிதி ஒதுக்கினார். அடுத்து வந்த எடப்பாடி பழனிசாமி கடந்த 2018ல் ரூ.250 கோடி, ஒதுக்கீடு செய்தார். பின்னர் ரூ.1000 கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற திமுக அரசு, பணிகளை வேகப்படுத்தி, இத்திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்து, வறண்ட பகுதிகள் முழுமையாகக் கணக்கிடப்பட்டது. இங்கு 125 குளம் மற்றும் குட்டைகள், 74 ஏரிகளில் இந்த நீரைக் கொண்டு வந்து நிரப்பலாம் என முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை பயிர் செய்யப்படாத 25,000 ஏக்கர் நிலம் நேரடியாக விளைச்சல் பெறும். மேலும் 5 லட்சம் மக்களுக்குக் குடிநீர் தேவைகளும் பூர்த்தி அடையும்.
பவானி அணைக்கட்டிலிருந்து உபரி நீரை எடுத்து 125 கிலோமீட்டருக்கு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 6 நீரேற்று நிலையங்கள் உருவாக்கப்பட்டது. நீரைக் கொண்டு செல்லும் குழாய்கள் போகிற வழிகளில் உள்ள நிலங்களின் உரிமையாளர்களுக்கு அரசு சார்பில் அந்த நிலங்களுக்கான தொகை வழங்கப்படுகிற பணியும் முடுக்கிவிடப்பட்டது. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அமைக்கப்பட்ட குழாய்கள் பல இடங்களில் உடைந்து வீணாகிப்போனது. அவற்றையெல்லாம் சரி செய்து முழுமையான திட்டப் பணியைத் தமிழக அரசு முடித்தது.
இந்த நிலையில், நிறைவேறிய இத்திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்காக 17 ஆம் தேதி காலை சென்னையிலிருந்து காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது குறித்துப் பேசிய அமைச்சர் முத்துசாமி, “இது ஒரு உபரி நீர் திட்டம். நேரடியாக பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து குளம் குட்டைகளுக்கு நிரப்ப முடியாது. எப்போது ஆற்றில் அதிகமாக உபரி நீர் வருகிறதோ அப்போதுதான் இதை எடுக்க முடியும். இதுதான் சட்டம். இதைக் கூட தெரியாத மெத்தப் படித்த அந்த மனிதர்(தமிழக பாஜக தலைவர்) விவசாயிகள் பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்ப எவ்வளவோ அரசியல் செய்யப் பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை. விவசாயிகள் பொதுமக்கள் எல்லோரும் முதல்வரின் நிர்வாகத்தை நம்புகிறார்கள். முதல்வரும் மக்களுக்கான ஆட்சியை நடத்துகிறார்.
65 ஆண்டுகால மக்களின் எதிர்பார்ப்பைத் தமிழக முதல்வரின் நிர்வாகத்தால் திமுக அரசு இப்போது நிறைவேற்றியுள்ளது. எப்போதெல்லாம் உபரி நீர் அதிகமாக வருகிறதோ அப்போதெல்லாம் இந்த மூன்று மாவட்டத்தில் உள்ள குளம் குட்டை ஏரி எனப் பல பகுதிகள் இந்த நீரால் சேமிக்கப்பட்டு வறட்சி இல்லாமல் வளமாகும்” என்றார்.
“பெருந்தலைவர் காமராஜர் அணைகள் கட்டினார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வறண்ட பகுதி இருக்கக் கூடாது என்பதை மையப்படுத்தி அந்த அணையில் இருந்து வருகிற உபரி நீரைக் கொண்டு வந்து சேமித்து வறட்சியை வளமாக்கியுள்ளார்” எனப் பெருமிதத்தோடு கூறுகிறார்கள் விவசாயிகள்.