ஒட்டன்சத்திரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் கே.ஆர். அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இந்த விழாவுக்கு நகர் மன்றத் துணைத் தலைவர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார்
இதில் அமைச்சர் சக்கர பாணி பேசும்போது. “தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றபின் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்பட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக, மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் 37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து விலையில்லா மிதிவண்டிகள், நோட்டு புத்தகம், கட்டணமில்லாப் பேருந்து, காலைச் சிற்றுண்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளார். கல்வி, சுகாதாரத்துக்கு முன்னுரிமை கொடுத்து, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 13 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளார்.
அதுபோல் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் படித்த பள்ளியில், தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை ஆகஸ்ட் 25ல் முதல்வர் தொடங்கிவைக்க உள்ளார். இதன் மூலம் மாநிலத்தில் 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. திமுக தேர்தல் அறிக்கையிலும் இடம் பெறவில்லை ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத் தரப்படுகிறது. மாவட்ட ஊராட்சித்துறை தலைவர் நிதியிலிருந்து கே. ஆர். அரசுப் பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலா 7 லட்சம் மதிப்பில் ஆர்.ஓ.வாட்டர் பிளான்ட் அமைக்கப்பட்டு உள்ளது” என்று கூறினார்.
இதில் பழநி ஆர்டிஓ சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன், தாசில்தார் முத்துசாமி, மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பொன்ராஜ் உட்பட நகர்மன்ற உறுப்பினர்கள் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.