சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘சென்னை இலக்கியத் திருவிழா’ இன்று தொடங்கப்பட்டது. இவ்விழாவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, விழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஏராளமான படைப்புகளைப் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து இவ்விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "மொழி என்பது ஒரு இனத்தினுடைய உயிர். இலக்கியம் என்பது ஒரு இனத்தின் இதயம். மொழியைக் காப்பாற்ற உயிரைக் கொடுத்த இனம்தான் நம் தமிழினம். மொழியை வெறும் பற்றால் மட்டும் வளர்த்து விட முடியாது. அறிவால், உணர்வால் வளர்க்க வேண்டும். அதற்காகத்தான் இத்தகைய இலக்கிய விழாக்களை நாம் நடத்துகிறோம். இன்றைய இளைய தலைமுறைக்குத் தமிழ் இலக்கிய உணர்வை ஊட்டியாக வேண்டும். இலக்கியம்தான் ஒரு மனிதனைப் பண்படுத்தும். மதவாதத்தாலும், சாதியவாதத்தாலும் மனிதர்களுக்குள் பிளவு ஏற்படும்போது ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருவள்ளுவரின் ஒரு வரி அனைவரையும் ஒன்றாக்கும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரி மனித சமுதாயத்தில் இருக்கும் அத்தனை வேறுபாடுகளையும் துடைத்தெறியும். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வரி கல் நெஞ்சத்தைக் கரைக்கும்.
உலகின் புகழ்பெற்ற புத்தகங்கள் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதே போன்று நம்முடைய தமிழ்ப் படைப்புகள் உலகின் பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.