புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு புதிதாக ஆயிரம் பேருந்துகளை வாங்குவதற்கும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் 500 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. அதன்படி ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த பேருந்துகளைப் புதுப்பித்து நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவற்றுக்கு மஞ்சள் வர்ணம் பூசும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து புதியதாக சீரமைக்கப்பட்ட பேருந்துகளில் இருக்கை வசதிகள் பயணிகளின் வசதிக்கேற்றவாறு விரிவாக இருக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 100 பேருந்துகள் இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இந்நிலையில், சென்னை தீவுத்திடலில் நவீன வசதிகள் கொண்ட 100 புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிற அரசுப் பேருந்துகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, மற்றும் பொன்முடி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் சென்னை, திருச்சி, கரூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் புதிய மஞ்சள் நிற பேருந்துகள் தயாராகி வருகின்றன. அதே சமயம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளும் இனி மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், சென்னை தீவுத்திடலில் புதிய வசதிகளுடன் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 100 அரசுப் பேருந்துகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் பகுதியை, நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.