முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் 72 மாவட்டச் செயலாளர்களும் கலந்துகொண்டனர். காணொளி மூலம் நடைபெற்று வந்த இந்த கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா, நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினுடன், கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுக அனைத்து தொண்டர்களுக்கும் பொதுவானது; நிர்வாகிகளுக்கு மட்டுமே சொந்தமில்லை. ஆட்சி அனைவருக்கும் பொதுவானது; அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கும் மட்டுமே சொந்தமில்லை. திமுகவினர் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து ஒற்றைச் சிந்தனையுடன் செயல்பட வேண்டும். அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் பொது நிகழ்ச்சிகளில் கவனமுடன் பேச வேண்டும்.
பாஜகவைப் பொறுத்தவரையில் இது அவர்களுக்கு வாழ்வா? சாவா? தேர்தல். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எதையும் செய்வார்கள். தமிழ்நாட்டில் அவர்கள் எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் தோல்லி அடைந்திருக்கின்றன. அதனால் கோபம் அதிகமாகும். நம்மை நோக்கிப் பாய்வார்கள். கடந்த காலங்களில் இதுபோன்று பல தடைகளை உடைத்துதான் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த முறையும் நாம் அப்படி வெற்றி பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.