மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த செவ்வாய்க்கிழமை(23.7.2024) நாடாளுமன்றத்தில் 2025 -2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும், பாஜக ஆட்சியமைக்கக் காரணமாக இருக்கும், சந்திரபாபு நாயுடுவையும், நிதிஷ்குமாரையும் திருப்திப்படுத்தவே, பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக படுதோல்வியை சந்தித்ததால் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல், பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று குற்றம்சாட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார். அதேபோன்று மத்திய பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோரும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். இந்த கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று(27..7.2024) டெல்லியில் நடைபெறுகிறது. இந்த நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “மத்திய அரசு அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் கீழ் வழக்கமாக விடுவிக்க வேண்டிய நிதியைக் கூட நிறுத்திவைத்திருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று கையெழுத்திட்டால் தான் நிதியை விடுவிப்போம் என்று அடம்பிடிக்கிறது மத்திய அரசு. மாணவர்களின் கல்வி கெடுமே என்று பாராமல், அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கமுடியாத நிலை வருமே என்று ஒரு துளி கவலை கூட இல்லாமல், தங்களுடைய கொள்கை திணிப்பையும், இந்தி திணிப்பையும் மட்டுமே முன்னிறுத்துகிறது பாஜக அரசு. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை பல்வேறு மாநில மக்கள் புறக்கணித்தனர். பாஜகவைப் புறக்கணித்த மக்களைப் பழிவாங்கும் பட்ஜெட் தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த மக்களை பழிவாங்குவதற்காகவே பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மேலும் தவறு செய்தால் மேலும் மேலும் தோல்வியைச் சந்திப்பீர்கள்; ஒரு சில மாநில கட்சிகளின் ஆதரவு இல்லை என்றால் பாஜகவால் ஆட்சி அமைத்திருக்க முடியாது.
தமிழ்நாட்டை பாஜக அரசு புறக்கணித்து வருகிறது; மதுரை எய்ம்ஸ் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு சிறப்பு திட்டத்தையும் பாஜக அறிவிக்கவில்லை. தமிழ்நாடு என்ற பெயரும் இல்லை; பாஜகவுக்குத் திருவள்ளுவரும் கசந்துபோய் விட்டார். இப்படி ஒரு பட்ஜெட்டில் திருக்குறள் இடம்பெறாதது நிம்மதி அளிக்கிறது. பாஜகவைத் தமிழக மக்கள் தோற்கடித்துள்ளனர். அதனால் தமிழகத்தை பாஜக வஞ்சிக்கிறது. இது தமிழகத்தை மட்டும் பழிவாங்குவதற்கான பட்ஜெட் அல்ல; ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையும் பழிவாங்குவதற்கான பட்ஜெட். நிச்சயம் இதற்குப் பதில் சொல்லியே ஆகா வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.