கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர் குப்பமான எக்கியர் குப்பத்தின் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் உட்பட நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நேரில் ஆறுதல் கூறவுள்ளார். மேலும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அதிகளவில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர், மற்றும் எஸ்.பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளார்.