மதுராந்தகம் அருகே நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை தீபத்தை பார்க்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர். அந்த வகையில் திருவண்ணாமலை தீபத்தை பார்ப்பதற்கு சென்னையைச் சேர்ந்த 6 பேர் காரில் சென்றிருந்தனர். இந்நிலையில் தீபத்தை பார்த்து விட்டு காரில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஜானகிபுரம் என்ற இடத்தில் கார் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியது. அப்போது பின்னால் வந்த கனரக வாகனம் காரின் மீது மோத இரண்டு வாகனங்களுக்கும் இடையே சிக்கி 6 பேர் பயணித்த கார் சுக்குநூறானது. அதில் பயணித்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.