தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறை நூலகங்களுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே வழங்கியுள்ளார்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (28.10,2023) சிறை கைதிகளின் நலனுக்காக தமிழ்நாட்டில் உள்ள சிறை நூலகங்களுக்கு 1,500க்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார். இதற்கான ஆணையை உள்துறை செயலாளர் அமுதாவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி ஆகியோர் உடன் இருந்தார். நன்கொடையாக பெறப்பட்ட 1,500 புத்தகங்களும் தமிழ்நாட்டில் உள்ள 10 மத்திய சிறைச்சாலை, 16 மாவட்ட சிறைகள் மற்றும் கிளைச்சிறைகள் என மொத்தமாக 140க்கும் மேற்பட்ட சிறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.