கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, (20.04.2023) சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரது வேண்டுகோளை ஏற்று சமூகநீதிக் காவலரான வி.பி. சிங்கிற்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முழு உருவக் கம்பீரச் சிலை அமைத்திட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று அனைத்து பணிகளும் முடிவடைந்தன.
இதனையடுத்து முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சிலையை இன்று (27.11.2023) காலை 11 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மேலும் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மனைவி சீதாகுமாரி, மகன்கள் அஜய சிங், அபய் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு தாய் வீடு உத்தரப்பிரதேசம் என்றால், தமிழ்நாடு தான் தந்தை வீடு. தந்தை பெரியார் பெயரை உச்சரிக்காமல் வி.பி.சிங்கின் பேச்சே இருக்காது. தந்தை பெரியாரின் சமூக நீதி மண்ணில் வி.பி.சிங்கிற்கு முதன் முதலாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. நானும் வி.பி.சிங்கும், இரண்டு முறை சந்தித்துள்ளோம். முதல் சந்திப்பு 1988 ஆம் ஆண்டு தேசிய முன்னணியில் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது இளைஞரணி சார்பில் எனது தலைமையில் மாபெரும் ஊர்வலத்தை தலைமை தாங்கி வந்தேன். கிட்டத்தட்ட 2 லட்சம் இளைஞர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை அண்ணா சாலையில் உள்ள காயித்தே மில்லத் கல்லூரி அருகில் அமைத்திருந்த மேடையில் மாலை தொடங்கி இரவு வரை ஊர்வலத்தை பார்த்து வியந்து பாராட்டினார். அப்போது வி.பி.சிங்கிடம் எனக்கு பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.
அடுத்த சந்திப்பு அவர் பிரதமராக இருந்த போது டெல்லிக்கு சென்ற எம்.எல்.ஏ. குழுவில் நானும் இருந்தேன். அவரிடம் ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது என்னை அறிமுகம் செய்து வைத்தபோது, இவரை எப்படி மறக்க முடியும் இவர் தான் சென்னையில் இளைஞர் படையை அணிவகுத்து நடத்தினார் என்று மறக்காமல் பாராட்டினார். அந்த பாராட்டு என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு. நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு வி.பி.சிங்கிற்கு இன்று சிலை திறந்திருக்கிறேன் என்றால் இதைவிட என்ன பெருமை எனக்கு வேண்டும்” எனத் தெரிவித்தார்.