சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் “முதலமைச்சர் கோப்பை - 2024” மாநில அளவிலான போட்டிகளுக்கான நிறைவு விழா இன்று (24.10.2024) நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி போட்டியில் வென்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், சென்னை மாநாகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், இப்போது துணை முதலமைச்சர் ஆனதில் விளையாட்டு வீரர்களின் பங்கும் இருக்கிறது என்பதை நான் தெளிவாக உணர்ந்திருக்கிறேன். விளையாட்டுத் துறையை மிகச் சிறப்பாக கவனித்து, இந்தியாவே உற்றுநோக்கும் துறையாக உதயநிதி மாற்றி காட்டியிருக்கிறார். அப்படி பார்த்தால், துறையும் வளர்ந்திருக்கிறது. துறையின் அமைச்சரும் வளர்ந்திருக்கிறார். ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, விளையாட்டை பொழுதுபோக்காக நினைக்கும் மைண்ட்செட்யை மாற்றி, ஸ்போர்ட்சில் ஒரு கேரியராக இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ப்ரொமோட் செய்து இருக்கிறோம்.
அதனால்தான். இந்திய வரலாற்றில் முதன்முறையாக, தமிழ்நாட்டில் 114 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்தினோம். 186 நாடுகளிலிருந்து, இரண்டாயிரத்திற்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் அந்தப்போட்டியில் பங்கேற்றார்கள். வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த செஸ் வீரர்களுக்கெல்லாம், நாம் அளித்த வரவேற்பு, குறுகிய காலத்தில் போட்டிகளை சிறப்பாக ஏற்பாடு செய்த முறை தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டு மக்களும் அவர்களுக்குக் கொடுத்த விருந்தோம்பல் என்று எல்லாவற்றையும் மனதாரப் பாராட்டினார்கள். அந்த செஸ் போட்டியின் துவக்க விழாவும் நிறைவு விழாவும் சோஷியல் மீடியாக்களில் வைரலானது.
தமிழ்ப் பண்பாட்டை உலகிற்கு எடுத்துக்காட்டும் வாய்ப்பாக அமைந்தது. அதேபோன்று, ‘சென்னை ஓபன் டள்யூ.டி.ஏ. (W.T.A.) உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் - 2022’ போட்டி, ஸ்குவாஷ் உலகக்கோப்பை - 2023, சென்னை செஸ் கிரண்ட்மாஸ்டர் - 2023 உள்ளிட்ட ஏராளமான போட்டிகளை எல்லோரும் பாராட்டும்படி நடத்தியிருக்கிறோம். இதுபோன்று நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துகிறது. பலரையும் அந்த விளையாட்டுகளை நோக்கி ஈர்க்கிறது. தொழில் முறை விளையாட்டு வீரர்கள் உருவாக ஊக்கமளிக்கிறது. விளையாட்டுத் துறை, எத்தனையோ மகத்தான சாதனைகளை செய்து வருகிறது. விளையாட்டு வீரர்களின் சாதனைகளை அங்கீகரிக்க, 'இந்து ஸ்போர்ட்ஸ்டார் ஏசஸ் விருது' வழங்கும் நிகழ்ச்சியில், 2023க்கான விளையாட்டை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலம் என்று தமிழ்நாட்டிற்கு பாராட்டு கிடைத்தது. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசு சார்பில் ஏராளமான உதவிகளை வழங்கிக்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.