திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் 6வது நினைவு நாள் இன்று (07.08.2024) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் மு.பெ. சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன்பின்னர் அண்ணாசாலையில் இருந்து மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் மலர் மரியாதை தூவி செலுத்தினர். முன்னதாக கலைஞரின் நினைவு தினத்தையொட்டி திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையைக் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.