திருப்பூர் மாவட்டம், வஞ்சிபாளையம், அவிநாசி-மங்கலம் சாலையில் கட்டப்பட்டுள்ள தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.11.2023) காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். மேலும் புதிதாகக் கட்டப்படவுள்ள தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “ஒரு காலத்தில் கல்வி என்பது எல்லாருக்கும் எளிதாக கிடைத்து விடவில்லை. எட்டாக்கனியாக இருந்த கல்வி, இன்றைக்கு எல்லாருக்கும் கிடைக்கிறது என்றால், அதற்குப் பின்னால் ஏராளமான போராட்டங்கள் இருக்கிறது. நீதிக்கட்சிக் காலத்திலிருந்து சமூகநீதியை வலியுறுத்தி வருகின்ற சமூக சீர்திருத்தத் தலைவர்களால்தான் இந்த மாற்றம் சாத்தியமானது. பெருந்தலைவர் காமராசர் பள்ளிக் கல்வியை ஊக்கப்படுத்தினார். அதை கல்லூரிக் கல்வியாக கலைஞர் விரிவுபடுத்தினார். திரும்பிய பக்கம் எல்லாம் பள்ளியும், கல்லூரியும் உருவாக்கப்பட்டதால்தான், இன்றைக்கு வீடுகள் தோறும் பட்டதாரிகள் வலம் வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் சமூக அமைப்புகளும், சேவை மனப்பான்மையோடு பள்ளி கல்லூரிகளைத் தொடங்கினார்கள். அதனால்தான் கல்வி நீரோடை தடங்கல் இல்லாமல் நாடு முழுவதும் பாய்கிறது. இந்தக் கல்வி வாய்ப்பை எல்லாம் தமிழ்நாட்டு இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். முக்கியமாகப் பெண் பிள்ளைகள், கல்லூரிக் கல்வி உயர் கல்விகள் என்று நிறைய படிக்க வேண்டும். பெண் கல்வியை ஊக்குவிப்பதற்குத்தான் அரசு பள்ளியில் படித்துவிட்டு, கல்லூரிக்கு வரும் மாணவிகளுக்கு திராவிட மாடல் ஆட்சியில் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தருகிறோம். பெண்களுக்கு விடியல் பயணம் என்று கட்டணமில்லா பேருந்து வசதி செய்து கொடுத்திருக்கிறோம்.
என்னுடைய கனவெல்லாம், தமிழ்நாட்டு மாணவர்களும் மாணவிகளும் உலகம் எல்லாம் சென்று சாதிக்க வேண்டும். நீங்கள் சாதிப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடையவேண்டும். பெண்களை வீட்டுக்குள் முடக்குகின்ற பழைய காலம் எல்லாம் மலையேறி சென்றுவிட்டது. பெண்கள் உலகை ஆளுகின்ற காலம் வந்துவிட்டது” எனப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க. பொன்முடி, சு. முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எனப் பலரும் கலந்து கொண்டனர்.