18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜுன் மாதம் 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26 ஆம் தேதி (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 27 ஆம் தேதி (27.06.2024) உரையாற்றினார். இதனையொட்டி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு மக்களவை உறுப்பினர்கள் பலரும் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் மோடி கடந்த 2 ஆம் தேதி (02.07.2024) பதில் அளித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் மக்களவை கூட்டத்தொடரின் முதல் அமர்வைத் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்திருந்தார். முன்னதாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான பிப்ரவரி 1 ஆம் தேதி (01.02.2024) மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு ஆறாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அதே சமயம் மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்த காரணத்தால் முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் (23.07.2024) தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் நிறைய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளன. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு இடம் பெற வேண்டிய திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் தர வேண்டும். பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்பது நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு ஆகும். கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் தர வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் வேண்டும் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.