Skip to main content

எடப்பாடி கான்வாயில் செருப்பு வீசிய இளைஞரை சிறையில் அடைக்க மறுப்பு! திருச்சியில் சிகிச்சை!

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

 

    முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க – பாஜக கூட்டணிக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். 31 ந் தேதி ஞாயிற்றுக் கிழமை தஞ்சாவூர் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் காந்திக்கு வாக்கு சேகரித்தவர் தொடர்ந்து தஞ்சை நாடாளுமன்ற தொகுதி த.மா.கா வேட்பாளர் என்.ஆர்.நடராஜனுக்கு வாக்கு சேகரித்தார்.

 

o

  

 இரவு 9 மணிக்கு வைத்திலிங்கம் எம்.பி யின் சொந்த தொகுதியாக ஒரத்தநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி கான்வாயில் நின்று நடராஜனுக்கு வாக்குகள் கேட்டு பேசிக் கொண்டிருந்த போது,  அருகில் வைத்திலிங்கம் எம்.பியும், வேட்பாளரும் நின்றனர். அப்போது வைத்திலிங்கத்திற்கு பின்னால் ஒரு செருப்பு வந்து விழுந்தது. செருப்பு விழுந்ததை முதலமைச்சர் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக வைத்திலிங்கம் மறைத்துக் கொண்டு நின்றார். 

 


    இந்த நிலையில் செருப்பு வீசிய உண்புண்டார்பட்டியை சேர்ந்த வைத்திலிங்கம் ஆதரவாளரான புண்ணியமூர்த்தியின் பட்டதாரி மகன் வேல்முருகன் தான் செருப்பு வீசியதாக வைத்திலிங்கம் மகன் உள்ளிட்ட ர.ர.க்கள் பிடித்து அடித்தனர். பிறகு போலிசார் மீட்டுச் சென்றனர். வேல்முருகன் அ.தி.மு.க கரை வேட்டி கட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூட்டத்தில் பேசிக் கொண்டனர்.

 

o


    ஞாயிற்றுக் கிழமை இரவு முழுவதும் வேல்முருகனிடம் போலிசார் விசாரனை செய்தனர். இந்த நிலையில் நேற்று திங்கள் கிழமை மதியம் ஒரத்தநாடு அருகில் உள்ள கண்ணந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரை செம்மண்குட்டை என்ற இடத்தில் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 650 வழிப்பறி செய்ததாக கைது செய்துள்ளனர். 

 


    கைது செய்யப்பட்ட வேல்முருகனை பட்டுக்கோட்டை கிளை சிறையில் அடைக்க சென்ற போது மனநிலை பாதிக்கப்பட்டவரை சிறையில் அடைக்க முடியாது என்று சிறை நிர்வாகம் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதனால் திருச்சியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


    ஞாயிற்றுக் கிழமை முதல்வர் கான்வாயில் செருப்பு வீசியதாக உடனே கைது செய்யப்பட்டு போலிசார் பாதுகாப்பில் இருந்த வேல்முருகன் எப்படி திங்கள் கிழமை மதியம் வழிப்பறியில் ஈடுபட்டார் என்று ஒரத்தநாடு பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்