தமிழக அரசின் சார்பில் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரம்180 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (27.08.2024) சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார். அதாவது தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது முதல்வரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை சான்பிரான்சிஸ்கோவில் முன்னணி நிறுவனத் தலைவர்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 29ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோ நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்நாட்டு முதலீடுகளையே தக்கவைக்க முடியாத முதலமைச்சர் உலக முதலீடுகளை ஈர்க்க பயணம் மேற்கொள்வது வேடிக்கையானது ஆகும். கடந்த மூன்றாண்டுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் அதன் மூலம் உருவான வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களைத் தமிழக அரசு வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், அமெரிக்கா செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான குழு, அந்நாட்டில் 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளில் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்பட்ட முதலீடுகளிலும் அதனால் உருவாகும் எனச் சொல்லப்பட்ட வேலைவாய்ப்புகளும் பாதியளவு கூட செயல்பாட்டிற்கு வராத நிலையில் முதலமைச்சரின் அடுத்தடுத்த வெளிநாட்டுப் பயணங்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு நாடுகளுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட அரசுமுறை பயணத்தின் போது ரூ.6,100 கோடி ரூபாய்க்கு முதலீடுகளும், அதன் மூலம் சுமார் 15 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகச் சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் என முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாடுகளின் பட்டியல் நீள்கிறதே தவிர, அங்கு ஈர்க்கப்பட்டதாகக் கூறப்பட்ட முதலீடுகளும், உறுதியளித்த வேலைவாய்ப்புகளும் சிறிதளவும் முன்னேற்றமின்றி அதே இடத்தில் இருப்பதாகவே தெரிகிறது.
அதே போல, உலக முதலீட்டாளர்கள் மாநாடு எனும் பெயரில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதில் எத்தனை நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கியுள்ளன?. எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது என்ற விவரங்களை வெளியிடத் தமிழக அரசு மறுக்கிறது. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தால் பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏற்கனவே தொழில் தொடங்கிய நிறுவனங்களும், தொழில் தொடங்குவதாக உறுதியளித்துள்ள நிறுவனங்களும் தற்போது அண்டை மாநிலங்களை நோக்கிச் செல்லும் சூழல் இருப்பதாக தொழில்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் அண்மையில் தமிழகத்திற்கு வருகை புரிந்த மத்தியப் பிரதேச முதலமைச்சரின் அழைப்பை ஏற்றுக் கோவை, திருப்பூரைச் சேர்ந்த பல நிறுவனங்கள் இடம்பெயரத் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனவே, திமுக ஆட்சிப்பொறுப்பற்ற மூன்றாண்டுகளில் முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இதுவரை எத்தனை நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கியுள்ளன?. அதன் மூலம் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது? என்ற விவரங்களை வெளியிடுவதோடு, தமிழகத்தைச் சேர்ந்த எந்தவொரு நிறுவனமும் அண்டை மாநிலங்களை நோக்கிச் செல்லாத வகையில், அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தருமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.