கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.11.2024) கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அந்த வகையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், விளாங்குறிச்சியில் 158 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் 2.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதோடு கோயம்புத்தூர் தங்கநகை கைவினைஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனுக்களை அளித்தனர்.
மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றின் தற்போதைய நிலை ஆகியவை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தர்மராஜா கோயில் வீதி, கெம்பட்டி காலனியில் உள்ள தங்கநகை தயாரிப்பு பட்டறைகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு, பொற்கொல்லர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார்.
அதோடு முதல்வர் மு.க. ஸ்டாலின், குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதியின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்கிடையே திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், செய்தியாளர் ஒருவர், ‘கோவையில் மக்கள் வரவேற்பு எவ்வாறு உள்ளது?. என்னென்ன கோரிக்கையில் வைத்துள்ளார்கள்? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், ‘பொதுமக்கள் பல கோரிக்கைகளை வைத்துள்ளார்கள். அவையெல்லாம் நிறைவேற்றித் தரப்படும் என உறுதி கொடுத்திருக்கிறோம். வரவேற்பு சிறப்பாக இருந்தது. மீண்டும் 2026இல் திமுக தான் ஆட்சிக்கு வரப்போகிறது என மக்களுடைய வரவேற்பிலிருந்து நான் தெரிந்து கொண்டேன்” எனப் பதிலளித்தார்.
அடுத்ததாக, ‘தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என எதிர்பார்க்கலாமா?’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், “மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாகப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம்” எனப் பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து, ‘திமுகவில் கட்சி ரீதியாகக் கோவை மாவட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாகத் தகவல் வருகிறது உண்மையா’ என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், “அது போன்ற திட்டம் இருந்தால் கூட செய்தியாளர்களிடம் கூற முடியாது. அது பற்றி கட்சியில் முடிவெடுக்க வேண்டிய விஷயம்” எனத் தெரிவித்தார்.