தொழிலதிபர் அதானியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திக்கவும் இல்லை. அந்தத் தனியார் நிறுவனத்துடன் தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்தம் போடவும் இல்லை. அதிமுக ஆட்சி ஒப்பந்தத்தில் கூறிய யூனிட்டுக்கு 7.01 சூரிய ஒளி மின்சார கட்டணத்தை எதிர்த்து திமுக ஆட்சியில் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே அவதூறு பரப்புவோர் மீது சட்டபூர்வமாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிலதிபர் அதானியை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்தது போலவும், அதிக விலைகொடுத்து அதானியிடமிருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பதுபோலவும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கற்பனையான தகவலைக் கட்டுக்கதைகள் போல் வெளியிட்டு தெரிவித்து வருவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் அதானியைச் சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாகச் சூரிய ஒளிமின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
அ.தி.மு.க. ஆட்சியில் நிர்வாக ரீதியாகவும், நிதிநிலைமை ரீதியாகவும் முற்றிலும் சீர்குலைந்திருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை அடுத்தடுத்த நிர்வாகச் சீர்திருத்த மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கை மூலம், இன்றைக்குத் தமிழ்நாடு மின்சார வாரியத்தைத் தலைநிமிர வைத்துள்ளவர் முதலமைச்சர் ஆவார். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படி அடிப்படை உண்மை கிஞ்சித்தும் இல்லாத பொய்க் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பி வருவது அரசியல் பண்பாடு அல்ல. ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் நுகர்கின்ற மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு புதுப்பிக்கத்தக்க மின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அபராதம் செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கட்டாய விதியின் அடிப்படையில் 2020, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் 2000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI)வுடன் ஒப்பந்தம் செய்துள்ளதே தவிர, எந்தவொரு தனியார் நிறுவனத்துடனும் அல்ல.
இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்த மின்சார வாரியங்களைப் போல தமிழ்நாடு மின்சார வாரியமும் மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் மட்டுமே மின்சாரம் கொள்முதல் செய்து வருகின்றது. குறிப்பாக, திமுக அரசு அமைந்தப் பிறகு, எந்த தனியார் நிறுவனங்களுடனும் மின்சார வாரியம் நேரடியாக எவ்விதமான ஒப்பந்தமும் செய்து கொள்வதில்லை. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும், மாநிலத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும், மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ள மரபுசாரா கொள்முதல் (RPO) இலக்குகளை அடைவதற்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெற்று செய்யப்பட்ட ஒப்பந்தங்களாகும். இதில், எவ்வித முறைகேடும், விதிமுறை மீறல்களும் இல்லை. இதுபோன்ற அடிப்படைத் தகவல்களைக்கூட அறியாதவர்கள் போல் அறிக்கைகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
ஆகவே உண்மை இவ்வாறு இருக்க, 2021ஆம் ஆண்டு மத்திய அரசின் கட்டாயத்தின் அடிப்படையில், மத்திய அரசு நிறுவனமான சூரிய மின்சக்தி கழகத்திடமிருந்து இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைப் போலவே சூரிய ஒளி மின்சாரத்தைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு மின்சார வாரியமும் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அது சம்பந்தமாக 2024ஆம் ஆண்டு நிறுவனத்தின் பிரதிநிதியை முதலமைச்சர் சந்தித்ததாகக் கூறுவது முற்றிலும் தவறானது மட்டுமல்லாது, மக்களிடம் வேண்டுமென்றே பொய்யான தகவல்களைக் கொண்டுச் சென்று தமிழ்நாட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியாகவே கருத வேண்டி உள்ளது. அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டதையும் மறைத்து உச்சநீதிமன்ற உத்தரவையும் அறியாதவர்கள் போல் அதிமுக அரசின் மின்கொள்முதலை திமுக அரசின் மின் கொள்முதல் முடிவு போல் சித்தரிக்க துடிக்கும் அரைகுறை அரசியல்வாதிகளுக்கு அதானி நிறுவனத்தையோ அதிமுகவையோ விமர்சிக்க துணிச்சல் இல்லாமல் தவிக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. அதற்குள்தான் அதிமுக - பா.ஜ.க. கூட்டணி திரைமறைவில் ஒளிந்து கிடக்கிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் அரசில், மின்வாரியம் நிர்வாக ரீதியாகவும், நிதிச் சுமையிலிருந்தும் சீரடைந்து, ஏழை எளிய நுகர்வோரின் நலனைப் பிரதானமாக எண்ணி நல்லாட்சிக்கு இலக்கணமாகச் செயல்பட்டு வருவதை பொறுத்துக்கொள்ள இயலாமல், “அவரைச் சந்தித்தார்”, “இந்தத் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார்” என்றெல்லாம் பொய்த் தகவல்களைத் தொடர்ந்து பரப்புவார்களேயானால், அவர்கள் மீது கடும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.