தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதன்படி முதற்கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து சேலம், மதுரை நாகப்பட்டினம் என பல்வேறு மண்டலங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார்.
அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு மேற்கொள்கிறார். அதன்படி இன்றும் நாளையும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு, அரசு திட்டங்களின் நிலை குறித்து கள ஆய்வு மேற்கொள்கிறார். இதற்கான ஆய்வு கூட்டம் மறைமலை நகரில் உள்ள ஊரக பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று ஆவடி, தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இரண்டாம் நாளான நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்நிலையில் இந்த ஆய்வு கூட்டத்திற்கு செல்லும் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை ஆய்வு செய்தார். பொதுமக்களின் குறைககளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது முதலமைச்சரின் தனிச் செயலாளரான சண்முகம் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.