அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும்போது, தனது அரசியல் சாசன பொறுப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தட்டிக் கழிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மாநில நீதித்துறையில், சிவில் நீதிபதிகள் பணிக்கான தேர்வுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டது.
முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வில் வெற்றிபெற்ற புதுச்சேரி அய்யனார் நகரைச் சேர்ந்த ஏ.கே.ஆனந்த் என்பவர், பட்டியல் இனத்தவருக்கான சாதிச் சான்றிதழை உரிய நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என, அவரது விண்ணப்பத்தை நிராகரித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன், பார்த்திபன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, சாதிச்சான்றிதழ் தரும் அதிகாரம் படைத்த தாசில்தாரர் வழங்கிய சான்றிதழைச் சரியானதல்ல என்று டிஎன்பிஎஸ்சி நிராகரித்தது, அரசியல் சாசனம் வழங்கிய உரிமையில் தலையிடுவதாகும் எனவும், காலதாமதம் என்ற ஒரே காரணத்தைக் காட்டி இடஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் மறுக்கப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் வாதிட்டார்.
தேர்வாணையம் தரப்பில் வழக்கறிஞர் நிறைமதி ஆஜராகி, மனுதாரருக்கு சாதிச்சான்றிதழ் வாங்க தரப்பட்ட அவகாசம் முடிவடைந்த நிலையில்தான் தேர்வாணையம் அவரது பெயரை பட்டியலில் வெளியிடவில்லை என்றும், அவரது விண்ணப்பம் சட்டப்படியே நிராகரிக்கப்பட்டதாகவும் விளக்கமளித்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய், தேர்வாணைய விளக்கத்தைப் போலவே வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் முதன்மை அமைப்பான அரசுப் பணியாளர் தேர்வாணையம், தனது அரசியல் சாசன பொறுப்புகளை தட்டிக் கழிக்கக் கூடாது எனக் கூறி, மனுதாரரின் சாதிச் சான்றிதழை ஏற்று, எட்டு வாரங்களுக்குள் அவரது தேர்வு நடைமுறைகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
பட்டியலின மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் சாதிச் சான்றிதழ்கள் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், அவர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையை மறுக்கக் கூடாது என்ற மத்திய அரசின் விதிகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சாதிச்சான்றிதழ் சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்படும்போது, அவசர கதியில் செயல்பட்டு, விண்ணப்பத்தை நிராகரிப்பது ஏற்கத் தக்கதல்ல என, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலுக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.