நண்பர்களுடன் விளையாடிய போது மின்சாரம் பாய்ந்து 4-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் கோபியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளப்பாளையம், டெலிபோன் நகர், விரிவாக்க வீதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜனனி. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும் சாய் தர்ஷன் (9) என்ற மகனும் உள்ளனர். இதில் சாய் தர்ஷன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் நேற்று இரவு சாய் தர்ஷன் தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்தான். அங்கு மின் கம்பம் இருந்துள்ளது. அப்போது சாய் தர்ஷன் மின் கம்பத்தில் இருந்த ஸ்டே ஒயரை பிடித்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக சாய் தர்ஷனை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த சாய் தர்ஷனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சாய் தர்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் மாணவனின் உடலை அவரது பெற்றோர் வீட்டுக்கு கொண்டு வந்தனர். இது குறித்து தகவலறிந்ததும் கோபிசெட்டிபாளையம் போலீசார் மாணவனின் வீட்டுக்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அந்த பகுதியில் மின் விநியோகம் தடைப்பட்டது. பின்னர் மின் ஊழியர்கள் அங்கு வந்து மின்தடையை சரி செய்தனர்.