தமிழகத்தில் 12- ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் இன்று (05/05/2022) தொடங்குகின்றன.
தமிழகம் முழுவதும் இன்று (05/05/2022) தொடங்கும் 12- ஆம் வகுப்பு தேர்வுகள் வரும் மே 28- ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த தேர்வுகளை 8,37,317 மாணவ, மாணவிகள் எழுதுகின்றன. இவர்களில் 3,98,321 பேர் மாணவர்கள் ஆவர். 4,68,587 மாணவிகள் ஆவர். 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 3,119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில் தேர்வறைகள் கிருமிநாசினிகள் தெளித்து சுத்தப்படுத்தி தேர்வு எண்கள் ஒட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளன. காலை 10.00 மணிக்கு தொடங்கும் தேர்வுகள் மதியம் 01.15 மணிக்கு நிறைவு பெறும்.
முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்கள் குறித்த விவரங்களை சரிபார்க்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் காப்பியடித்தலைத் தடுக்க 1,000 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு அலைபேசி எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.