புதுக்கோட்டையில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் செய்த செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதச் செல்லும் நிலையில் ஒரு வருடமாக தாங்கள் படித்த வகுப்பறையை சுத்தம் செய்து சுவர்களுக்கு வண்ணம் தீட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி இறுதி நாட்களில் பள்ளியை விட்டு செல்லும் போது தாங்கள் ஒரு வருடம் அமர்ந்து படித்த வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டெஸ்க், கரும்பலகை, மின்விசிறிகளை உடைத்து நாசம் செய்து அதனை தங்கள் செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த ஏராளமான சம்பவங்கள் பொதுமக்களிடம் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. பலரும் அந்த மாணவர்களை திட்டித் தீர்த்தனர். சில இடங்களில் மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்தது.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 32 மாணவர்களும் அடுத்த சில நாட்களில் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் நேற்று பள்ளி விடுமுறை நாளில் பள்ளிக்குச் சென்று கடந்த ஒரு வருடமாக தாங்கள் படித்த பள்ளி வகுப்பறைக்கு தங்கள் சொந்த செலவில் பெயிண்ட் வாங்கி வந்து சுவர்களில் தாங்களே வண்ணம் தீட்டினார்கள். இதனைப் பார்த்த மற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் மாணவர்களைப் பாராட்டினார்கள். தங்கள் வகுப்பறையை மாணவர்களே சுத்தம் செய்து வண்ணம் தீட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.