நாகூர் பட்டினச்சேரி கிராமத்தில் ஊர் வரவு செலவு கணக்கு பார்ப்பதில் இரு தரப்பு மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதல் கலவரமாக வெடித்தது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யக் கோரி ரத்தம் சொட்டச் சொட்ட மீனவர்கள் நாகூரில் சாலை மறியலில் இறங்கினர். கலவரத்தைக் கட்டுப்படுத்த நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் Siffs (எ) தென்னிந்திய மீனவர் நலச் சங்கம் உருவாக்கி அதன் மூலம் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கப் பெற்ற வருவாய் சுமார் 80 லட்சம் ரூபாய் இருப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த கணக்கு வழக்குடன் ஊர் வரவு செலவு கணக்கையும் முறையாகச் சரி பார்க்க வேண்டும் என பட்டினச்சேரி கிராம மீனவர்கள் ஒரு தரப்பினர் குரல் எழுப்பினர். இது தொடர்பாக இருதரப்பு மீனவர்கள் மத்தியில் கருத்து மோதல் நிலவி வந்தது.
இச்சம்பவம் தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் இரு தரப்பு மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தை இழுபறியிலேயே முடிந்தது. இந்நிலையில் பட்டினச்சேரி கிராமத்தில் ஊர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடந்துள்ளது. கூட்டத்திற்குப் பின்னர் ஒரு தரப்பு மீனவர்கள் ஆயுதம் மற்றும் கத்தி, கற்கள் கட்டைகள் கொண்டு எதிர்த்தரப்பு மீனவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் ஜெகநாதன் என்பவரும், அவரது மனைவி கலைவாணி அதேபோல் மீனவர் கிருஷ்ணமூர்த்தி அவரது மகன் ராமன் மற்றும் சௌந்தரராஜன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 5 பேர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஊரைவிட்டுச் சாலைக்கு ஓடி வந்தனர். பின்னர் தாக்குதல் தொடுத்த குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி நாகூரில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதின் காரணமாக அங்கு வந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மீனவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் மீனவர்கள் இடையே கலவரம் மூளும் என்பதால், அதனைக் கட்டுப்படுத்த நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.