ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி ஞானதண்டாயுதபாணியை தரிசிக்க தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 25ம் தேதி தைப்பூசம் முடிந்தும் கூட முருக பக்தர்கள் தொடர்ந்து முருகனை தரிசிக்க வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் தடுப்புகளில் ஏறிக் குதித்துச் சென்றுள்ளனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த கோயில் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்திய போது, வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதில் கோயில் பாதுகாவலர் தாக்கியதில் சேலத்தைச் சேர்ந்த சந்திரன் என்ற பக்தர் தலையில் காயம் ஏற்பட்டது.
சந்திரனின் உறவினர்கள் கூட்டமாகக் கூடி பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். சம்பவம் அறிந்து வந்த போலீஸார், பக்தர்களையும், பாதுகாவலரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தால் மலைமீது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.