தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிடுவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை சமீபத்தில் ஆவேசமாக பேசியிருந்தார். இதற்கு எதிர்வினையாற்றிய தமிழக பாஜக தலைவர், "எங்கள் தலைமையகத்தை முற்றுகையிடும் தேதியை காங்கிரஸ் முன் கூட்டியே தெரிவித்தால், வரப்போகும் 10 பேருக்கு உணவு தயார் செய்வோம்" என்று பதிலடித் தந்திருந்தார்.
இது காங்கிரஸ், பாஜக கட்சிகளிடையே வார்த்தை போராக வெடித்தபடி இருந்த நிலையில், “பாஜக அலுவலகத்திற்கு வரும் தேதியை இரண்டு நாட்களுக்கு முன்பே சொல்கிறோம். எங்களுக்கு மாட்டுக்கறி உணவைத் தயாரித்து வையுங்கள்" எனப் பதிலடிக்கு பதிலடித் தந்தார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இவர் உச்சரித்த மாட்டுக்கறி உணவு இரு கட்சிகளிலும் விவாதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இளங்கோவனின் மாட்டுக்கறி விசயத்தை கையிலெடுத்துள்ளது பாஜக. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத், “மகாத்மா காந்தி வழி நடத்திய காங்கிரஸ் கட்சி, இத்தாலி சோனியா காந்தியின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற காங்கிரஸ் கட்சியினர் மாட்டுக்கறியைத்தான் சாப்பிடுகின்றனர் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிய வருகிறது.
காங்கிரஸ் அலுவலகத்திற்கும் இளங்கோவன் வீட்டிற்கு வருபவர்களுக்கும் மாட்டுக்கறி உணவு தான் பரிமாறப்படுகிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் இளங்கோவனும் மாட்டுக்கறி உணவு கேட்கிறார். மாட்டுக்கறி எனத் திரும்பத் திரும்ப பேசுபவர்கள், பன்றி இறைச்சி பற்றி பேச மறுக்கின்றனர் அப்படி மறுப்பதன் மர்மம் என்ன வென்று தெரியவில்லை. எல்லாம் வாக்கு வங்கி படுத்தும்பாடு” என்று இளங்கோவன் மீதும், காங்கிரஸ் மீதும் பாய்ந்துள்ளார்.
ஏ.என்.எஸ்.பிரசாத்தின் இந்த அறிக்கை, காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.