உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி ஆம்பூரில் பாஜகவினரிடையே வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லும் முகவர்கள் மற்றும் இதர செலவுகளுக்காக பணம் கொடுப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே கடந்த சில தினங்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை முதல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த பாஜகவினர், மாலை நேரத்தில் திடீரென இருதரப்பாக பிரிந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்கு வாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயமடைந்தக் கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீவர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் பாஜகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.