புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் பாஜகவில் உட்கட்சி மோதல்கள் எப்போதும் உட்சகட்டமாகவே இருக்கும். கடந்த காலங்களில் சில சம்பவங்கள் நடந்து கட்சி தலைமை வரை சென்று பஞ்சாயத்துகள் நடந்துள்ளது. அதேபோல் இன்றும் மாவட்டத் தலைவரை தாக்கிய ஒரு சம்பவம் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் ஜெகதீசன். இவர் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் புதுக்கோட்டையில் வசிக்கிறார். தற்போது மத்திய அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது. அந்த வகையில் எதிர்வரும் 9 ந் தேதி அறந்தாங்கியில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடத்துவது சம்பந்தமாக ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் ஜெகதீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலைக்கு பிறகு நடந்துள்ளது.
இந்த கூட்டத்தில் பாஜக அறந்தாங்கி நகரத் தலைவர் மீனாவின் கணவர் இளங்கோவன் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைந்து மேடையில் ஏறி அமரும்போது அருகில் இருந்த மாவட்டத் தலைவர் ஜெகதீசன், இளங்கோவனை பார்த்து உங்களுக்குதான் அழைப்பு இல்லையே ஏன் கூட்டத்திற்கு வந்தீர்கள் என கேட்டதால் உடனே எழுந்த இளங்கோவன் தான் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் சேரை எடுத்து மாவட்டத் தலைவர் ஜெகதீசனை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த மாவட்டத் தலைவர் ஜெகதீசன் உடனே அங்கிருந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மாவட்டத் தலைவர் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து இளங்கோவன் வெளியேறாமல் மண்டப கதவுகளை அடைத்துள்ளனர். மாவட்டத் தலைவர் ஜெகதீசன் புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி போலிசார் நகரத் தலைவர் மீனாவின் கணவர் இளங்கோவனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜகவின் உள்கட்சி மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.