திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்(மார்க்ஸிட்) சார்பில் போட்டியிடும் எழுத்தாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரபல திரைப்பட இயக்குனர்கள் உரையாற்றினர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில தலைவரான சு.வெங்கடேசன் ஐந்திற்கும் மேற்பட்ட கவிதை மற்றும் கட்டூரைத் தொகுப்புகளையும், மூன்று நாவல்களையும், ஒரு குறு நாவலையும் எழுதியுள்ளார். இவரின் முதல் நாவலான ‘காவல் கோட்டம்’ சாகித்திய அகடமி விருது பெற்றது. இந்த நாவலே வசந்தபாலன் இயக்கத்தில் ‘அரவான்’ என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. அடுத்ததாக ‘சந்திரஹாசம்’என்ற நாவலை எழுதினார். இவரின் ‘வேள்பாரி’நாவல் பிரபல வார இதழில் தொடராக வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்றது. கல்லூரிக் காலத்திலிருந்தே கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை தீவிரமாக இணைத்துக்கொண்ட சு.வெங்கடேசன் சிறந்த எழுத்தாளராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இன்னிலையில்...
நேற்று முன்தினம் (ஏப்ரல் 6) மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சு.வெங்கடேசனை ஆதரித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் கலைஞர்களின் சங்கமம் என்ற பெயரில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற அந்த நிகழ்வில் இயக்குனர் கோபி நயினார், இயக்குனர் லெனின் பாராதி, இயக்குனர் ராஜூ முருகன், இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர் இவர்களுடன் திரைக்கலைஞரும், இயக்குனருமான ரோகினி மற்றும் கவிஞர் யுகபாரதி ஆகியோரும் இணைந்து வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து உரையாற்றினர்.