Skip to main content

'வடக்கு டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் திட்டமிட்டே மத்திய அரசு கலவரத்தை அரங்கேற்றியது' - ம.ம.க ஜவாஹிருல்லா

Published on 15/09/2020 | Edited on 15/09/2020

 

CIA issue central government Manithaneya Makkal Katchi M. H. Jawahirullah

 

 

டெல்லி ஜவஹர்லால் பல்கலை.முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை உடனே விடுதலை செய்ய வேண்டும். சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிய முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை விட்டுள்ளார்.

 

அந்த அறிக்கையில், "மத்திய அரசு புகுத்த நினைத்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக  கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்றன. பிப்ரவரி மாதத்தில் வடக்கு டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் திட்டமிட்டே மத்திய அரசு கலவரத்தை அரங்கேற்றியது. இந்த வன்முறைகளில் 54 பேர் கொல்லப்பட்டனர். 600 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 97 பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர்.

 

டெல்லி கலவரம் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி சிறப்பு காவல் பிரிவினர் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் உமர் காலித்தை சுமார் 11 மணிநேரம் விசாரித்த பின்னர் போராட்டத்தில் வன்முறையைத் தூண்ட முன்கூட்டியே திட்டமிட்டதாகவும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகவும் கூறி UAPA சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் திரு சீதாராம் யெச்சூரி, பிரபல பொருளாதார நிபுணர் திருமதி ஜெயதி கோஷ், சுயாட்சி அதிகாரத்தின் தலைவர் யோகேந்திர யாதவ், பேராசிரியர் அபூர்வாணந்த், ஆவணப்படத் தயாரிப்பாளர் ராகுல் ராய் உள்ளிட்ட பல தலைவர்கள் மீது வன்முறையை தூண்டிவிட்டதாக டெல்லி காவல்துறை வழக்கை பதிவு செய்ய முனைகின்றது. 

 

பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் வர்மா உள்ளிட்டோர் வன்முறைகளை தூண்டும் வன்ம உரைகள் ஆற்றியது குறித்த காணொளிகள் இருந்த போதினும் அவர்களை கைது செய்ய முனையாத டெல்லி காவல்துறை வெளிப்படையான பாரபட்ச போக்கை கடைபிடித்து வருகின்றது. இக்கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில் சிபிஐயின் முன்னாள் தலைமை இயக்குனர் உள்ளிட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் டெல்லி காவல் ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள கருத்துரிமை என்ற அடிப்படை உரிமையை தான் நிலைநாட்டியுள்ளார்கள். 

 

சிஏஏவிற்கு எதிராக கருத்து சொன்னவர்கள் மீது வழக்கு பதியப்படும் நிலையில் வன்முறையை தூண்டிய ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் தப்பவிடப்பட்டுள்ளது தங்களுக்கு வேதனை அளிப்பதாக தமது கடிதத்தில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ்  அதிகாரிகள்  குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. பீமா கோரேகான் வழக்கில் வன்முறையை நடத்தியவர்களைத் தப்பவிட்டு சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுபோல் டெல்லி கலவர வழக்கிலும் பாஜக அரசு காவல்துறையை ஏவி அரசியல் கட்சி தலைவர்களையும் சமூக செயற்பாட்டாளர்களையும் பழி வாங்கும் போக்கை கடைபிடித்து வருகின்றது. 

 

உமர் காலித்தை பொய்க் குற்றச்சாட்டுகளிலிருந்தும் போலியான வழக்கிலிருந்தும் உடனே விடுவிக்க வேண்டும் என்றும் சீத்தாரம் யெச்சூரி உள்ளிட்டேர் மீது வழக்கு தொடுத்து கருத்துரிமையை பறிக்கும் போக்கை டெல்லி காவல்துறை கைவிட வேண்டுமென மனிதநேய மக்கள்  கட்சி கேட்டுக் கொள்கிறது" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்