Skip to main content

இன்று முன்னோர்களுக்கு அஞ்சலி நாள்....

Published on 02/11/2019 | Edited on 02/11/2019

கிறிஸ்தவ சமூக மக்கள் தங்களது முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக கடைபிடித்து வருகிறார்கள்.
 

christian feast day


அதன் தொடர் நிகழ்வாக இன்று ஈரோட்டில் சத்திரோடு சந்திப்பில் உள்ள கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவ சமூகத்தினர் தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களின் கல்லறைக்கு வந்து, அந்த கல்லறைகளை சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்து, மலர்வளையம் வைத்தும், மெழுகு வர்த்தி ஏந்தி, ஜெபப் புத்தகத்தை படித்து, முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர். 


இதைத்தொடர்ந்து இன்று மாலை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல் தமிழகம் முழுக்க உள்ள கிருஸ்துவர்கள் அந்தந்த ஊர்களில் உள்ள கல்லறைதோட்டத்திற்கு சென்று மலர் வலையம் வைத்து பிராத்தனை செய்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் மாமனார் காலத்திலிருந்து இன்று உங்கள் பேரப்பிள்ளைகள் வரை'-கொதித்தெழுந்த ஜேம்ஸ் வசந்தன்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 'From the time of your father-in-law to your grandchildren today'-boiled James Vasanthan

'தாங்கள் கனடாவில் வீடு இல்லாமல், கார் இல்லாமல் கஷ்டப்பட்டபோது தேவதூதர் ஒருவர் கனவில் வந்து, கார் வாங்க உதவி செய்தார்' என பால் தினகரனின் மனைவி இவாஞ்சலின் வெளியிட்ட வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்த வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்த ஜேம்ஸ் வசந்தனின் பதிவில்,

'இவாஞ்சலின் பால் தினகரன் அவர்களுக்கு,

அண்மையில் நீங்கள் பேசியிருந்த ஒரு காணொளி என் கவனத்துக்கு வந்தது. இந்தக் குறிப்பிட்ட காணொளி கிறிஸ்தவர் மட்டுமல்லாது பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் அது நேர்மறையான காரணத்துக்காக அல்ல; ஏளனத்துக்கும் நகைப்புக்கும்.

இந்தக் கேலியும் கிண்டலும் உங்களைப் பற்றியோ, உங்கள் குடும்பத்தைப் பற்றியோ தனிப்பட்ட விதத்தில் இருந்திருந்தால் என்னை ஒன்றும் பாதித்திருக்காது. உங்களுக்காக கொஞ்சம் பரிதாபப்பட்டுவிட்டு, என் வேலையைப் பார்த்திருப்பேன். ஆனால், அது ஆண்டவரையும், ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகத்தையும் தவறாகக் காட்டியதால் இந்தப் பகிர்வு.

உங்கள் குடும்பம் எவ்வளவு செல்வாக்கான குடும்பம் என்பது உலகத்துக்கே தெரியும். புகழிலும், பேரிலும் மட்டுமல்ல; பணத்திலும், சொத்திலும்தான். பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு நீங்கள் அதிபதி என்பது ஊரறிந்த ரகசியம். உங்கள் மாமனார் காலத்திலிருந்து இன்று உங்கள் பேரப்பிள்ளைகள் வரை அத்தனை பேரும் எப்படிப் படாடோபமான செல்வச் செழிப்பில் திளைக்கிறவர் என்பது மறைக்கவே இயலாத உண்மை. உலகப் பணக்காரர் பட்டியலில் ஏன் உங்கள் குடும்பத்தின் பெயர் வருவதில்லை என்று நாங்கள் வியப்பதுண்டு!

 'From the time of your father-in-law to your grandchildren today'-boiled James Vasanthan

உங்கள் குடும்பம் எதற்கு, எப்படி கனடா நாட்டுக்குச் சென்றது; அந்தக் குடியுரிமை எப்படி வாங்கினீர்கள்; பின் எதற்காக, எப்படி அமெரிக்காவுக்கு மாற்றலாகிச் சென்றீர்கள்; இன்று டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரத்தில் எவ்வளவு பெரிய வீட்டை வாங்கிக் குடியிருக்கிறீர்கள்; வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்த செய்தியை எவ்வளவு ரகசியமாக பல ஆண்டுகள் ஒளித்து வைத்தீர்கள்; அவர்களுக்குத் தெரிந்தால் உங்கள் பலகோடி வருமானம் போய்விடும் என்பதால் அதிகப் படிப்போ, உலக அறிவோ இல்லாத பல இலட்ச பாமர விசுவாசிகளை எப்படி இங்கிருப்பது போலவே ஏமாற்றி வந்தீர்கள் என்பவை போன்ற பல தகவல்களை மேல் மட்டக் கிறிஸ்தவர் அறிவர்.

இந்தச் சூழலில் நீங்கள் "எப்படி ஒரு வீடு கூட இல்லாமல் ஓட்டலில் தங்கியிருந்தோம்" என்று நடிகையர் திலகம் அவர்கள் திறமையை மிஞ்சும் விதமாகக் குரலை தாழ்த்தி, உதடுகள் துடிக்க, வரும் கண்ணீரை அடக்க முயல்வது போலெல்லாம் ஒரு சாகஸம் செய்திருக்கிறீர்கள்!

ஒரு வீடு இல்லாமல் இத்தனை குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு போய் கனடா நாட்டில் ஒரு நட்சத்திர விடுதியில் நாட்கணக்கில் தங்கக்கூடியவருக்கு எவ்வளவு பண வலிமை இருக்கும் என்று கொஞ்சம் அறிவு உள்ளவன் கூட யோசிப்பான் என்று உங்களுக்குத் தோணலையா? இவ்வளவு அப்பட்டமாகப் பொய் பேசினால் அசிங்கமாகி விடுமே என்றுகூட உங்களால் சிந்திக்க முடியலையா?

எதற்காக தேவையற்ற இந்தப் பொய் நாடகம்? அதுவும் இத்தனை ஆண்டுகள் கழித்து? வேதத்திலுள்ள நல்ல செய்திகளை மட்டும் நீங்கள் பேசினால் போதும்; உங்களுடைய பொய்சாட்சிகள் வேண்டாம்!

வீடு வாங்கிய கதையும், கார் வாங்கிய கதையும், இந்த அம்மா விடுற கதைகளையும் கேட்கக் கேட்கக் கொதிக்கிறது என்று பல கிறிஸ்தவ விசுவாசிகள் புலம்புகிறார்கள். தமிழ்க் கிறிஸ்தவச் சமூகமே அவமானத்தில் குறுகி நிற்கிறது.

உங்கள் குடும்பத்தின் உண்மையான பின்னணியை அக்குவேறு ஆணிவேறாகப் பட்டியலிடக் காத்திருக்கின்றனர் பலர். அது கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் மட்டுப்படுத்திவிடும் என்கிற ஒரே காரணத்துக்காக அமைதி காக்கின்றனர். கிறிஸ்தவத்தை கேலிக்கூத்தாக்க முயல்கிற பல கோமாளிகளின் கூட்டத்திற்கு தலைமை தாங்க உங்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது. நற்செய்தியைப் பரப்பவேண்டிய பொறுப்பிலுள்ள நீங்கள் ஏன் இப்படிப் பொய்ச்செய்தியைப் பரப்பி பணம் பறிக்க முயல்கிறீகள்?

மூத்த தினகரன் தொடங்கிய அந்த நல்ல பணியை, உங்களுக்கென்று கொடுக்கப்பட்டிருக்கிற ஊழியத்தை கொஞ்சமேனும் உண்மையுடனும், மனச்சான்றுடனும் செய்ய முற்படுங்கள். இருக்கிற பணம் போதும். இதற்கு மேலும் ஏன் இப்படி வெறிபிடித்து அலைகிறீர்கள்? மக்களின் சாபத்துக்குக் கூட நீங்கள் தப்பித்து விடலாம். ஆண்டவரின் சினத்துக்கு ஆளாகிவிடாமல் கொஞ்சம் திருந்திச் செயல்படப் பாருங்கள்.

பலர் இன்னமும் உங்களை நம்புகிறார்கள். அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதா, உங்களை நினைத்து வேதனைப்படுவதா என்று புரியவில்லை!' என ஆதங்கப்பட்டுள்ளார்.

Next Story

மதபோதகரின் பேச்சைக் கேட்டு பட்டினி கிடந்து உயிரிழந்த மக்கள்; 81 பேரின் சடலம் தோண்டியெடுப்பு

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

'இயேசுவை காணலாம் வாங்க' என போதகரின் பேச்சைக் கேட்டு 80க்கும் மேற்பட்டோர் கென்யாவில் பட்டினி கிடந்து உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கென்யாவின் மலிந்தி பகுதியில் உள்ள ஷஹாகோலா எனும் கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி ஒன்றில் சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் நடத்திய சோதனையில் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை என மொத்தமாக 50க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் முதல் கட்டமாக கண்டெடுக்கப்பட்டது. 'இயேசுவை காண வேண்டுமென்றால் பட்டினி கிடந்து நோன்பு இருக்க வேண்டும்' என்று மத போதகர் கூறியதை நம்பிய அப்பகுதி மக்கள் பட்டினி கிடந்துள்ளனர்.

 

இறுதியில் உணவின்றி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாருக்கும் தெரியாமல் வனப்பகுதியில் புதைக்கப்பட்ட பின்னணி வெளியானது. இது தொடர்பாக மத போதகர் பால் வேகன்ஸி கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது கட்ட தேடலில் பல சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை மீட்கப்பட்ட சட்டங்கள் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளது. உள்ளூர் குழுக்கள் நடத்தி வரும் தேடுதலில் மேலும் பல உடல்கள் கைப்பற்றப்படலாம் என கூறப்படுகிறது.