தீப்பெட்டியோ, பட்டாசோ சீனாவுடைய மூக்கு இந்தியா வரை தாராளமாகவே நீள்கிறது, அதுவும் சட்டவிரோதமாக. கோவில்பட்டி, தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும், சீன உற்பத்தியான பிளாஸ்டிக்காலான சிகரெட் லைட்டரால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகக் குமுறுகின்றனர்.
தென் தமிழகத்தில் தீப்பெட்டித் தொழில் எவ்வாறு தடம் பதித்தது என்று வரலாற்றைப் புரட்டினால், சிவகாசியைச் சேர்ந்த அய்யநாடார், சண்முக நாடார் போன்ற தொழில் பிதாமகன்கள், 1922-ல் கொல்கத்தா சென்று தீப்பெட்டித் தொழிலைக் கற்றுவந்து, வறட்சியால் விவசாயம் பொய்த்து வேலையில்லாமல் இருந்த மக்களுக்கு பெருமளவில் வேலை வாய்ப்பை அளித்ததெல்லாம் நடந்துள்ளது.
நடப்பு விவகாரத்துக்கு வருவோம். விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களில், கடந்த 80 ஆண்டுகளாக லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு தீப்பெட்டித் தொழில் வாழ்வளித்து வருகிறது. அதில் 90 சதவீதம் பேர் பெண் தொழிலாளர்களாக உள்ளனர். இந்தியாவின் 90 சதவீத தீப்பெட்டித் தேவையையும், உலக நாடுகளின் 40 சதவீத தீப்பெட்டித் தேவையையும், தமிழகத் தீப்பெட்டி நிறுவனங்கள்தான் பூர்த்திசெய்து வருகின்றன.
தற்போது, சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கிலான சிகரெட் லைட்டர்கள் நூற்றுக்கணக்கான கண்டெய்னர்கள் மூலமாக இறக்குமதி செய்யப்பட்டு, பல மாநிலங்களிலும் விற்பனையாகிறது. மியான்மர் வழியாக சட்டவிரோதமாகவும் கொண்டு வரப்படுகிறது. இது, தமிழகத் தீப்பெட்டித் தொழிலுக்குப் பெரும் இடையூறாக இருக்கிறது.
இந்நிலையில், தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், கலைஞர் ஆட்சிக் காலத்தில் சீனத் தீப்பெட்டிகளுக்குத் தடையைப் பெற்றுத் தந்ததை நன்றியோடு நினைவு கூர்கின்றனர். பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும், சீன லைட்டர்களுக்கு நிரந்தரத் தடையைப் பெற்றுத் தர வேண்டும் என, சாத்தூரில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர்., முதலமைச்சரின் கவனத்திற்கு அவர்களின் கோரிக்கையைக் கொண்டு செல்வதாகவும், முதலமைச்சரை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
சட்ட ரீதியான அழுத்தத்தால், சிபிஐ ஆய்வுகளால், ஒருபுறம் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு கடும் நெருக்கடியைத் தொழிலாளர்கள் சந்தித்துவரும் நிலையில், தீப்பெட்டித் தொழிலாளர்களின் பரிதவிப்பும் தென்மாவட்டங்களை நிலைகுலையச் செய்துள்ளன.