தஞ்சாவூர் மாவட்டம், மேல அலங்கம் கோட்டை அகழி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் பெயிண்டராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 5 வயதில் ஜீவிதா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புவனேஸ்வரிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
இந்த நிலையில் இன்று (13/02/2021) மதியம் வீட்டிற்குள் குழந்தைகளைத் தூங்க வைத்துவிட்டு புவனேஸ்வரி கழிவறைக்குச் சென்ற நேரத்தில், வீட்டுக்குள் நுழைந்த இரண்டு குரங்குகள், குழந்தைகளைத் தூக்கிச் சென்றதால், குழந்தையின் அழுகுரல் கேட்டு புவனேஸ்வரியும் அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்து பார்த்தனர். அப்போது, ஒரு குழந்தையை வீட்டின் மேற்கூரையில் குரங்கு வைத்திருந்தது. குரங்கை விரட்டிய போது குழந்தையைத் தூக்கிப் போட்டுவிட்டு குரங்கு தப்பியோடியது.
அந்தக் குழந்தையை மீட்டுப் பார்த்தபோது காலில் காயம் ஏற்பட்டிருந்தது. மற்றொரு குரங்கு குழந்தையுடன் ஓடிவிட்டது. அதைத் தேடியபோது, அருகில் உள்ள குளத்திற்குள் குழந்தை கிடப்பதைப் பார்த்து அதிர்ந்த பொதுமக்கள், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டதாகக் கூறினர். இந்தச் சம்பவத்தால் தாய் உள்பட உறவினர்கள் கதறி அழுதனர்.
இது குறித்து அப்பகுதியினர் கூறும் போது, "கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக 20- க்கும் மேற்பட்ட குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து, அட்டகாசம் செய்கிறது. எந்தப் பொருளும் வைக்க முடியவில்லை. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சி மற்றும் வனத்துறையிடம் பலமுறை முறையிட்டும் அலட்சியமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் இன்று ஒரு குழந்தையைப் பறிகொடுத்து நிற்கிறோம்" என்று கண்கலங்கினர்.
அதிகாரிகள் எப்போது தான் மக்களுக்காகச் செயல்படுவார்களோ! அலட்சியம் காட்டி குழந்தையின் உயிர்போகக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.