நாமக்கல் அருகே, குடும்பத் தகராறில் பெற்ற குழந்தைகளை மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கொடூர தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு உட்பட்ட குண்டூர் நாடு அருகே உள்ள அரசம்பட்டியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது 29). இவருடைய மனைவி பாக்கியம் (வயது 26). இவர்களுக்கு 8 வயதில் கிரிதாஸ் என்ற ஆண் குழந்தையும், 6 வயதில் கவிதர்ஷினி என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.
இவர்கள் இருவரும் கொல்லிமலையில் உள்ள அரியூர் நாடு, தெம்பலம் அரசுப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். கடந்த 2019- ஆம் ஆண்டு நவ. 7- ஆம் தேதி இரு குழந்தைகளும் திடீரென்று மாயமாகினர்.
இதுகுறித்து வாழவந்திநாடு காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், அதே ஆண்டு நவ. 11- ஆம் தேதி, தன் இரு குழந்தைகளையும் சீக்குப்பாறை காட்சி முனையில் இருந்து கீழே தள்ளி விட்டு கொலை செய்து விட்டதாகக்கூறி, சிரஞ்சீவி என்பவர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார்.
இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்தனர். சிரஞ்சீவி அளித்த ஒப்புதல் வாக்குமூலம், ''எனக்கு, அளவுக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் எனக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நானும் எனது மனைவியும் கர்நாடகா மாநிலத்திற்கு ஒரு எஸ்டேட்டில் மிளகு பறிக்கும் வேலைக்குச் சென்று விட்டோம். அதனால் என் மகனையும், மகளையும் தேர்புளியமரம் பகுதியில் வசித்து வரும் என் பெற்றோர் பாதுகாப்பில் விட்டுவிட்டேன்.
பிறகு தீபாவளி நேரத்தில் நாங்கள் சொந்த ஊர் திரும்பினோம். அதன்பிறகு, நான் மனைவி, குழந்தைகளுடன் மாமனார் வீட்டில் ஒன்றாக குடியேறிவிட்டோம். குழந்தைகளையும் அங்கிருந்தே தெம்பலம் அரசுப்பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தோம்.
இந்நிலையில், மாமனார் வீட்டில் இருக்கப் பிடிக்காததால் தீபாவளிக்கு இரு நாள்களுக்கு முன்பு மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு அரசம்பட்டியில் உள்ள என் வீட்டிற்கு வந்து விட்டேன். அன்று இரவு என் மாமனாரும், மாமியாரும் என் வீட்டிற்கு வந்து மனைவி, குழந்தைகளை அவர்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
பலமுறை அழைத்தும் என் மனைவி என்னுடன் வர மறுத்துவிட்டார். அதனால் என் மனைவி மீது கோபம் அதிகமானது. இந்நிலையில் 7.11.2019ம் தேதி, என் குழந்தைகள் படித்து வரும் தெம்பலம் பள்ளிக்குச் சென்றேன். பள்ளி முடிந்து வெளியே வந்த என் குழந்தைகளை அழைத்துக் கொண்டு என் பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டேன். அதற்கு அடுத்த நாள் குழந்தைகளை என் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன்.
இதையடுத்து 11.11.20219ம் தேதி, கொல்லிமலை சீக்குப்பாறை காட்சி முனை பகுதிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றேன். அப்போது என் குழந்தைகள், அப்பா இனிமேல் அம்மா நம் வீட்டிற்கு வர மாட்டாங்களா? என்று அழுதார்கள். நான் அவர்களுக்காக எவ்வளவோ செய்தாலும், என் பேச்சைக் கேட்காமல் அம்மாவைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தனர். என் மீது பாசம் இல்லாத குழந்தைகளைப் பார்த்து எனக்கு வெறுப்பாக இருந்தது.
அதனால் ஆத்திரம் அடைந்த நான் என் மகளையும், மகனையும் காட்சி முனை பகுதியில் இருந்து கீழே தள்ளிவிட்டுக் கொலை செய்து விட்டேன். என் குழந்தைகளையே கொன்று விட்டதால், இனியும் அவர்கள் அணிந்திருந்த உடைகள் மட்டும் எதற்கு வீட்டில் இருக்க வேண்டும் எனக்கருதி, 12.11.2019ம் தேதி, அவற்றையும் எடுத்துச்சென்று சவுக்குத் தோப்பில் உள்ள மரக்கழிவுகள் கொட்டும் குழியில் போட்டுவிட்டேன்,'' என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை நாமக்கல் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில், நீதிபதி நந்தினி முன்னிலையில் நடந்து வந்தது. அரசுத்தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் விஜயபாரதி ஆஜராகி வாதாடினார். வழக்கின் விசாரணை முடிந்து, செவ்வாய்க்கிழமை (செப். 13) தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதன்படி, இரு குழந்தைகளையும் கொலை செய்த குற்றத்திற்காக சிரஞ்சீவிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். இந்த சம்பவம் கொல்லிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.