Skip to main content

குடும்ப கட்டுப்பாடு செய்த பின் மீண்டும் பிரசவம்: இழப்பீடு கோரி பெண் வழக்கு!

Published on 01/09/2018 | Edited on 01/09/2018
Pregnant


குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை முறையாக செய்யாததால், மீண்டும் கருவுற்று மூன்றாவதாக பெண் குழந்தையை பெற்றெடுத்ததால் பாதிக்கப்பட்ட பெண், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியை பூர்வீகமாகக் கொண்ட தனம் என்ற பெண்ணுக்கு, திருமணமாகி ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ளன. இரண்டாவது பெண் குழந்தையை பெற்றெடுத்த அவர், நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதுசம்பந்தமான சான்றிதழும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், வழக்கமான உடல் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தனம் கருவுற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் தனக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி அரசுக்கு உத்தரவிடக்கோரி தனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்த போது, இரு பெண் குழந்தைகளுக்கான அரசு உதவிகளைப் பெற்று வரும் நிலையில், மூன்றாவதும் பெண் குழந்தையை பெற்றதால் அரசின் உதவிகளை இழக்கும் நிலை ஏற்பட்டு, பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவார் என்பதால் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, இது குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், மருத்துவமனை அதிகாரிக்கும் நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.

 

சார்ந்த செய்திகள்