Skip to main content

தற்கொலையில் முடிந்த குழந்தை திருமணம்..! 

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

child marriage near madurai

 

மதுரை பாண்டிகோவில் அருகே ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்த ரஜினிகாந்த் - தாமரைச்செல்வி தம்பதியினரின் மூத்த மகள், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்துவருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் மாணவியின் விருப்பமின்றி தாய் மாமனுடன் திருமணம் செய்வதாக பெற்றோர்கள் முடிவெடுத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 

 

இதனையடுத்து மாணவி, தனக்கு விருப்பமின்றி திருமணம் முயற்சிகள் நடைபெறுவதாகவும், தனக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாகாவும், அதனால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆன்லைன் மூலமாகப் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூற அனுப்பிவைத்துள்ளனர். மாணவிக்கு மாவட்டக் குழந்தைகள் நல அலுவலர்கள் மனநல ஆலோசனை வழங்கிய நிலையில், உறவினரின் வீட்டில் தங்கியுள்ளார். 

 

நேற்று (16.06.2021) மாணவி தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். பிறகு அம்மாணவி தனது அறைக்குள் சென்றுள்ளார். ஆனால், நேரமாகியும் அவர் அறையைத் திறக்காததால், ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளனர். அப்போது, மாணவி தூக்கிட்டுக்கொண்டது தெரியவந்துள்ளது. அதனைப் பார்த்து பதறிப்போன பெற்றோர்கள், அருகில் உள்ளவர்களின் உதவியுடன் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், மாணவி ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

 

அதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு இந்தத் தற்கொலை குறித்து தகவல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவியின் உடலை, உடற்கூராய்விற்காக மதுரை அரசு மருத்துவமனைக்குப் போலீசார் அனுப்பிவைத்துள்ளனர். மாணவியின் தற்கொலை குறித்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அண்ணாநகர் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 

 

ஊரடங்கைப் பயன்படுத்தி பள்ளி மாணவிக்குத் திருமணம் நடத்த முயன்றதால் மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இதேபோன்று ஊரடங்கைப் பயன்படுத்தி குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறுவதால், அதனைத் தடுக்க காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தனிப்பிரிவை உருவாக்கி புகார்களை ரகசியமாக பெற வேண்டும் எனவும் மகளிர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்