நவம்பர் 14, முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த தினம். பிரதமர் நேருவை நேரு மாமா என இந்தியா முழுக்க உள்ள குழந்தைகள், மாணவர்கள் செல்லப் பெயர் கொடுத்து அழைத்தனர். அந்த அளவுக்கு நேரு மீது குழந்தைகளுக்கும், குழந்தைகள் மீது நேரு அவர்களுக்கும் பாசம் இருந்தது.
அப்படிப்பட்ட வரிசையில் தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளை வளர்க்கும் முறையில் அன்பு, பாசம், நேசம், ஒழுக்கம் என்பதில் பெற்றோர்கள் கடமையும் நேர்மையுடனும் இருக்கிறார்களா என்றால் பெருமளவு இல்லை என ஆதாரப்பூர்வமாக நடத்தப்பட்ட ஆய்வுகள் வெளிப்படுத்துகிறது. அதில் ஒன்று தான் இந்த செய்தி வெளிக்காட்டுகிறது.
மத்திய அரசின் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாடு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் "சைல்டு லைன் இந்தியா" என்ற பவுண்டேசன் செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்பின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் சைல்டு லைன் செயல்பட்டு வருகின்றது. இது தவிர சென்ற ஏப்ரல் மாதம் முதல் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் சைல்டு லைன் கிளை செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
சைல்டு லைன் அமைப்பு முக்கிய பணியாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், சித்ரவதைகள், குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்தல், குழந்தைகளை பாதுகாத்தல், ஆதவற்ற குழந்தைகளை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்தல் அவர்கள் பாதுகாப்பாக வளர வைப்பது, உரிய கல்வி கொடுப்பது உள்ளிட்ட பல பணிகள் செய்து வருகின்றது.
ஈரோடு ரயில்நிலையத்தில் சைல்டு லைன் தொடங்கப்பட்ட இந்த 7 மாதங்களில் மட்டும் 150 குழந்தைகள் ரயில்நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சைல்டு லைன் அமைப்பு கூறுகிறது. இது சம்பந்தமாக ஈரோடு ரயில்வே சைல்டு லைன் திட்ட மேலாளர் மகேஸ்வரன் அவர்களிடம் நாம் பேசியபோது அவர், "ஈரோடு ரயில்நிலையத்தில் செயல்பட்டு வரும் இந்த சைல்டு லைன் மூலமாக மாதம் ஒன்றுக்கு சராசரியாக 25 குழந்தைகள் மீட்டு வருகிறோம் இந்த ஏழு மாதங்களில் மட்டும் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோர் மற்றும் அரசு காப்பகங்களில் ஒப்படைத்துள்ளோம். பெரும்பாலும் தங்களது பெற்றோர்கள் திட்டுதல், அடித்தல், கொடுமைப்படுத்துதல் மற்றும் உறவினர்களால் தொல்லை, பெற்றோரின் சண்டையால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறுதல், படிக்கும் பள்ளிகள் குழந்தைகளை மார்க் எடுக்க இயந்திரம் போல் நடந்துவது அதனால் படிக்க விருப்பமின்மை உள்ளிட்ட பல காரணங்களால் குழந்தைகள் மன வேதனையுடன் வீட்டை விட்டு வெளியேறுவது வாடிக்கையாக இருந்து வருகின்றது. இது தவிர குழந்தை கடத்தலும் இருந்து வருகின்றது.
சென்ற மாதம் சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து 6 சிறுமிகள், 2 சிறுவர்கள் ரயில் மூலம் ஒரு கடத்தல் கும்பல் அவர்களை கடத்தி வந்ததும், பின்னர் அக்குழந்தைகளை ஈரோடு ரயில்நிலையத்தில் நாங்கள் மீட்டு காப்பகத்தில் ஒப்டைத்தோம். தமிழகத்திலேயே முதன்முறையாக சைல்டு லைன் புகார் மூலம் ஆள் கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது ஈரோட்டில் தான். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், வன்முறைகள் அல்லது கடத்தல் போன்றவை குறித்து பொதுமக்கள் எங்களுக்கு 1098 என்ற போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது ஆபத்தானது. குழந்தைகள் மீது பெற்றோர்கள் அன்புடன் கலந்த தனி கவனம் செலுத்துவது அவசியமான ஒன்று.