நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார்கள். இந்த குழந்தைகள் வாடகைத் தாய் மூலம் பிறந்திருக்கலாம் எனத் தகவல் வெளியான நிலையில் அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. சட்ட விதிமுறைகளை மீறி இருவரும் வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெற்றுள்ளதாகத் தொடர்ந்து விமர்சனம் எழுந்தது.
இது தொடர்பாக அமைச்சர் மா. சுப்ரமணியன் இருவரிடமும் விளக்கம் கேட்கப்படும் எனவும் பின்பு இந்த விவகாரம் குறித்து Director of medical services விசாரணை நடத்த வேண்டுமா என முடிவு எடுப்பார்கள் எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில், விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அதில் விதி மீறல்கள் இருக்கிறதா மற்றும் முரண்பாடுகள் உள்ளதா என்பதைக் கண்டறிந்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது இதுதொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதில், தாங்கள் 6 ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்துகொண்டதாகவும், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறப் பதிவு செய்ததாகவும், ஜூன் மாதம்தான் அதில் திருத்தம் வந்ததால் அது எங்களைக் கட்டுப்படுத்தாது என விக்கி தரப்பில் விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.