தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் சேத்துப்பட்டு திவ்யா கல்விக்குழும வளாகத்தில் நடைபெற்றது.
திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவரும் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக மாநிலத் தலைவருமான டாக்டர் மு.ராஜேந்திரன், ஐ.ஏ.எஸ். தலைமையின் கீழ் செயல்படும், சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட அளவிலான போட்டிகள் அண்மையில் நடந்தது. அதில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு, திருவண்ணாமலை மாவட்ட சிலம்பாட்டக் கழகத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் பெ.பெரியசாமி வரவேற்புரை ஆற்றினார்.
இந்த மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் சேத்துப்பட்டு, வந்தவாசி, ஆரணி, பெரணமல்லூர், தண்டராம்பட்டு, போளூர் ஆகிய ஊர்களிலிருந்து சிலம்பாட்ட வீரர்கள் பங்கேற்றனர். போட்டியின் நடுவர்களாக விழுப்புரம் மாவட்ட சிலம்பாட்டக் கழகச் செயலாளர் க.குணசேகரன், உடற்கல்வி ஆசிரியர் மகேஸ்வரி ஆகியோர் இருந்தனர். சப்-ஜூனியர் பிரிவில் ஆரணி கோட்டைச் சிலம்பக் குழுவின் ஜெயரேவன், பெரணமல்லூர் புத்தாஸ் சிலம்பக் குழுவின் பிரவீன் ஆகியோர் முதலிடத்தையும், ஜூனியர் பிரிவில் ஆவணியாபுரம் புத்தாஸ் சிலம்பக் குழுவின் முரசொலி முதலிடத்தையும், சீனியர் பிரிவில் வந்தவாசி அகிலாண்டேஸ்வரி கல்லூரி மாணவி விஷ்ணுப்ரியா, சேத்துப்பட்டு புத்தாஸ் சிலம்பக் குழுவின் இ.காமேஷ் ஆகியோர் முதலிடத்தையும், சூப்பர் சீனியர் பிரிவில் தண்டராம்பட்டு முனியப்பன், சேத்துப்பட்டு பூபாலன் ஆகியோர் முதலிடத்தையும் பிடித்தனர்.
போட்டிகளில் வென்றவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கா.முத்துவேல் பரிசுகளை வழங்கினார். இந்தப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற சிலம்பாட்ட வீரர்கள், வரும் ஜனவரி இறுதி வாரத்தில் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் பங்கேற்கவிருக்கிறார்கள். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ந.பார்த்திபன், கவி.விஜய், ச.சத்தீஷ், இரா.பாலாஜி. ச.சந்தோஷ், ஏ.காமேஷ், மு.பாலாஜி, ச.சரண்யா ஆகியோர் செய்திருந்தனர்.
பல்வேறு பாரம்பரிய விளையாட்டுக்களை அழித்துவரும் இந்த ஆண்ட்ராய்ட் சூறாவளிக்கு நடுவிலும், பழந்தமிழரின் தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பக் கலையை முன்னெடுத்து, அதை வளர்க்கப் பாடுபட்டுவரும் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் ஆவார்கள்.