ரூ.6 கோடி மதிப்பிலான நிலப்பஞ்சாயத்தில் வியாழனன்று ஒருவர் கொலையான நிலையில், காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட ஆறுக்கும் அதிகமான நபர்கள் மீது கொலை வழக்கு தற்பொழுது பதிவாகியுள்ளது. இதனால் மீண்டும் சாத்தான்குளம் துணைச்சரக காவல்துறை தலைப்பு செய்தியாகிவருவது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா கொம்மடிக் கோட்டை சொக்கன் குடியிருப்பை சேர்ந்தவர் தனிஷ்லாஸின் மகனான செல்வன். லாரியில் தண்ணீர் ஏற்றி அதனை விற்பனை செய்துவந்த செல்வனிற்கு பங்காரு ராஜன் மற்றும் பீட்டர் ராஜன் என இரு சகோதரர்கள் உண்டு. இவர்களுக்கு சொந்தமாக படுக்கப்பத்து டூ காந்தி நகர் செல்லும் வழியில் ரூ.6 கோடி மதிப்பிலான நிலம் உண்டு. இவர்களது நிலத்திற்கு அருகில் இவர்களது சித்தப்பா சிலுவைதாசனின் நிலமும் இருந்துள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்குமுன்பு, செல்வனின் சித்தப்பா சிலுவைதாசன் தனக்கு சொந்தமான நிலத்தை அ.தி.மு.கவின் மாவட்ட வர்த்தகர் பிரிவு செயலாளரான திருமணவேல் என்பவரின் மனைவிக்கு கிரையம் செய்து கொடுத்திருக்கின்றார்.
இதேவேளையில், அருகிலிருந்த செல்வனின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தையும் அபகரிக்கும் எண்ணத்தில் பிரச்சனையை செய்திருக்கின்றார் அ.தி.மு.கவின் திருமணவேல். இது தெரிந்த செல்வன் மற்றும் அவரது சகோதாரர்கள் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அ.தி.மு.க பிரமுகர் என்பதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை தட்டார்மடம் காவல்நிலையம்.
சாத்தான்குளம் காவல்துறை துணைச்சரகத்திற்குட்பட்ட தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க பிரமுகருடன் சேர்ந்து நிலத்தை கொடுக்குமாறு மிரட்டிவருவதாகவும், தங்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் மேலும் தன் மீதும், தன்னுடைய சகோதரர்கள் மீதும் பொய் வழக்குகள் போட்டுள்ளதாகவும் மாநில மனித உரிமை ஆணையம் தொடங்கி, சாத்தான்குளம் டி.எஸ்.பி. வரை புகார் கொடுத்து வந்துள்ளனர் செல்வனின் குடும்பத்தினர். இருப்பினும் புகார்கள் தேக்க நிலையிலேயே இருந்திருக்கின்றது. இது இப்படியிருக்க, வியாழக்கிழமையன்று மதியம் 1.30 மணியளவில் தட்டார்மடம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கொழுந்தட்டு அருகில் மளிகை கடை ஒன்று அருகில் செல்வன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த பொழுது TN69 K 8957 என்ற பதிவெண் கொண்ட இன்னோவா காரில் வந்த மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை மறித்து செல்வனை கடத்தி சென்றதாகவும், கடத்தப்பட்ட அவர் உருட்டுக்கட்டையால் தாக்கி காட்டுக்குளம் பகுதியில் வீசிவிட்டு சென்றதாகவும், காயம்பட்ட செல்வனை மீட்டு நெல்லை மாவட்டம் திசையன்விளை அரசு மருத்துவமனையில் சேர்க்க அவர் இறந்துவிட்டார் என தகவலளித்தது தட்டார்மட காவல்துறை. "இந்த கொலை சம்பவத்திற்கு அடிப்படையே நிலப்பஞ்சாயத்துதான். இந்த கொலைக்கு காரணம் அ.தி.மு.க பிரமுகர் மற்றும் தட்டார்மட இன்ஸ்பெக்டருமே" என கொலையுண்ட செல்வனின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமையன்று தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல் உட்பட மேலும் சிலர் மீது (107, 336, 302, 364 ) கொலை வழக்கு உட்பட 4 பிரிவுகளில் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன். மீண்டும் சாத்தான்குளம் காவல்துறை துணைச்சரகத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், காவல்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் சாத்தான்குளம் பகுதி மீண்டும் பரப்பரப்பை உண்டாக்கியுள்ளது.