திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு முன்னிலையில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் தேசியக் கொடியேற்றினார்.
அண்மையில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டிருந்த அறிவிப்பில், 'ஒரு சில ஊராட்சிகளில், சாதிய பாகுபாடுகள் காரணமாக, தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்சனைகளோ, அவமதிக்கும் செயல்களோ நடைபெறலாம் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது. தீண்டாமையை எந்த வடிவத்திலும் செயல்படுத்துவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தோர், பழங்குடியின ஊராட்சித் தலைவர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதை அவமதித்தால், அது தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை கருத்தில் கொண்டு எவ்வித சாதிய பாகுபாடுமின்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளின் அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஊராட்சியில் செய்யப்படுகின்ற வளர்ச்சிப் பணிகள் குறித்து அலுவலகத்தின் உள்ளே சென்று பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம்மாளை அவரது இருக்கையில் அமர வைத்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆத்துப்பாக்கம் ஊராட்சியின் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார். இந்த ஊராட்சிக்கு என்ன தேவைப்படுகிறது என்பது குறித்து எல்லாம் விரிவாக அவர்களிடம் பேசினார்.
அதன் பிறகு தனது முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம்மாளை தேசியக் கொடியை ஏற்ற வைத்த மரியாதை செய்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் பட்டியல் தலைவர் தேசியக்கொடி ஏற்றக்கூடாது என சர்ச்சை எழுந்த நிலையில், இறையன்பு நேரடி விசிட் அடித்து ஊராட்சி பிரதிநிதிகள் மட்டுமே கொடி ஏற்ற வேண்டும் என்பதை உறுதி செய்து செய்துள்ளார்.