
நாமக்கல்லில் சாலைவிபத்தில் படுகாயம் அடைந்து 'இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48' திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுக் குணமடைந்த சிறுவனை, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
நாமக்கல் மாவட்டம், மண்கரடு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் வர்ஷாந்த், சாலை விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்த நிலையில், நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அச்சிறுவனுக்கு 'இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48' திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் மூலம், சிறுவன் வர்ஷாந்த் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில், அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆகியோர் வீட்டில் இருந்த சிறுவனை நேரில் சென்று நலம் விசாரித்தனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சிறுவனிடம் நலம் விசாரித்தார்.