கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடியில் இன்று காலை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, ராஜகண்ணப்பன், சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடன் இருந்தனர். இந்நிகழ்வில் சிறுமி ஒருவர் தனது சேமிப்பை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசுகையில், “கடந்த 17, 18 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று 17 ஆம் தேதிதான் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால் வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட பல மடங்கு அதிகமாக மழை பெய்திருக்கிறது. இந்த மழைப் பதிவு என்பது வரலாற்றில் இதுவரை இல்லாதது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததை மக்கள் அறிவார்கள். காயல்பட்டினத்தில் 94 செ.மீ. மழை பெய்தது. இதனால் அந்த பகுதியே வெள்ளக் காடாக மாறியது. 150 ஆண்டுகளில் இல்லாத மழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை மிக மோசமாக உள்ளன.
மழை வெள்ள பாதிப்பிலிருந்து சென்னை மக்களைப் போல் தென்மாவட்ட மக்களையும் அரசு காக்கும் என உறுதி தருகிறேன். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். மழையால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கும் நிவாரணம் ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரேஷன் அட்டைகளுக்குத் தலா ரூ.1,000 வழங்கப்படும்.
சென்னை வெள்ளம், தென் மாவட்ட வெள்ளம் ஆகியவற்றை தேசியப் பேரிடராக மத்திய அரசு இன்னும் அறிவிக்கவுமில்லை. நிதியும் ஒதுக்கவில்லை. சென்னைக்கு மட்டும் ரூ. 1500 கோடி நிதியை தமிழ்நாடு அரசு செலவு செய்துள்ளது. மத்திய அரசு விடுவித்த ரூ. 450 கோடி வழக்கமாகத் தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய மாநிலப் பேரிடர் நிவாரண நிதிக்கான தொகைதானே தவிர, வெள்ள நிவாரணத் தொகை அல்ல. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அளித்தது தவணைதானே தவிர கூடுதல் நிதி அல்ல. அடிக்கடி டெல்லி செல்லும் ஆளுநர் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதியைப் பெற்றுத் தர வேண்டும்” எனத் தெரிவித்தார்.