கலைஞர் முதலமைச்சராக இருக்கும்போது உதயசூரியன் உதிக்கும் முன்பு, அமைச்சர்களின் வீட்டு தொலைபேசி ஒலிக்கிறது என்றால் அது முதலமைச்சரின் தொலைபேசி தான் என்பது 100 சதவிகிதம் உறுதி என்பார்கள் அமைச்சர்கள். விடியும் முன்பே எழுந்து அன்றைய செய்தித்தாள்களை வாசிப்பவர், ஏதாவது துறைகள் குறித்து குறைகள் எனச் செய்தி வந்திருந்தாலோ, மாவட்டங்களில் இந்த பணிகள் நடக்கவில்லை எனச் செய்தி வந்திருந்தாலோ உடனடியாக சம்மந்தப்பட்ட துறை அமைச்சரை தொடர்பு கொண்டு, உங்க துறையைப்பற்றி இப்படியொரு புகார் செய்தித்தாளில் போட்டிருக்கு எனக் கேள்வி கேட்பார். உங்க பகுதியில் மக்கள் குடி தண்ணீர் பிரச்சனையால் ரொம்ப அவதிப்படுவதாக செய்தி வந்திருக்கு. உடனே அங்கப்போய் என்னன்னு விசாரிச்சி, சரி செய்ங்க என உத்தரவிடுவார். மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகளை நேரடியாக தொடர்புகொண்டு அவரே பேசுவார்.
2006 – 2011ல் முதல்வராக இருந்தபோது, புதிய தலைமை செயலகம், சட்டமன்ற வளாகம் கட்டப்படும்போது தினமும் அங்கே போய் பார்வையிடுவார். பணிகள் குறித்து விவாதிப்பார். நள்ளிரவு நேரத்திலும் அதிகாரிகளை அழைத்து தகவல் கேட்பார், அப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு இருந்தபோது, நள்ளிரவில் அழைத்து துறை சார்ந்த பிரச்சனையை கூறி இதற்கு என்ன செய்யப்போறிங்க என விசாரிப்பார் என முகநூலில் கடந்த காலத்தில் பதிவு செய்துள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதிமுகவினரால் இரும்புத்தலைவி என பாராட்டப்பட்ட முதலமைச்சர் என புகழப்பட்ட ஜெயலலிதாவோ, எளிமையான முதல்வர் என கட்டமைக்கப்பட்ட எடப்பாடி.பழனிச்சாமியோ இப்படி தன் அமைச்சரவை சகாக்களையோ, அதிகாரிகளையோ வேலைகள் குறித்து விவாதித்ததாக தகவல் இல்லை.
2021மே மாதம் முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப்போல், மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் பிரமாண்ட முறையில் அமைக்க முடிவு செய்து அறிவித்தார். பொதுப்பணித்துறை அந்நூலகத்தை கட்டிவருகிறது.
இந்நிலையில் முதலமைச்சரின் செயல்பாடுகள் குறித்து மக்கள் நிகழ்ச்சி ஒன்றில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டார். அவர் தெரிவித்ததாவது; “நமது முதலமைச்சர் எப்போது உறங்குகிறார், எப்போது விழித்துக்கொண்டு இருக்கிறார் என தெரிந்துகொள்ளவே முடியவில்லை. ஒருநாள் நள்ளிரவை தாண்டி 2.15 மணிக்கு என் மொபைல் லைனுக்கு முதலமைச்சர் வந்தார். பொதுவாக சில விஷயங்களை பேசிவிட்டு, மதுரையில் கட்டப்பட்டுவரும் தலைவர் நூலகப்பணிகள் எந்தளவுக்கு இருக்கிறது எனக்கேட்டார். 30 சதவிகித பணிகள் முடிந்துவிட்டது எனச்சொன்னதை கேட்டுக்கொண்டவர், அதுகுறித்து இன்னும் சில சந்தேகங்கள், கேள்விகளை கேட்டார். குறிப்பிட்ட தேதிக்குள் பணியை முடித்துவிடுவோம் எனச்சொன்னேன்” இவ்வாறு அதில் பேசினார். மேலும், நள்ளிரவைத்தாண்டி முதலமைச்சர் விழித்துக்கொண்டு இருப்பதோடு அமைச்சர்களிடம், அவர்கள் துறைசார்ந்த பணிகள் முதலமைச்சர் பேசுவதை மக்கள் கூட்டங்களில் பதிவு செய்தார்.
ஓய்வறியா உழைப்பாளி என மறைந்த முதலமைச்சர் கலைஞரை அரசியல் மாச்சரியங்களை மறந்து அனைத்து கட்சியினரும், அவரின் கீழ்பணியாற்றிய அதிகாரிகள் குறிப்பிடுவார்கள். அந்தவரிசையில் அசந்து தூக்கும் நல்ல உறக்கம் வரும்நேரத்தில் அமைச்சர்களை அழைத்து முதலமைச்சர் ஸ்டாலின் விவாதிப்பதை கேட்டு ஆச்சர்யம் ஏற்படுகிறது என்கிறார்கள் பலதரப்பினரும்.